அதிமுக அரசு சொன்னதால்தான் சிசிடிவி அகற்றப்பட்டது: அப்போலோ!

Published On:

| By Balaji

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அதிமுக அரசு கூறியதால் தான் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன என்று அப்போலோ நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். ஆனால் பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் இந்த விசாரணைக்கு முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை. அதுபோன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சிசிடிவி காட்சிகள் இல்லாததும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று அப்போலோ சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அப்போலோவின் பதில் மனுவில், ஆறுமுகசாமி ஆணையத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மருத்துவ ரீதியாக இந்த ஆணையம் விசாரணை மேற்கொள்ளவில்லை. இந்த ஆணையத்தில் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறாத நிலையில் மருத்துவ ரீதியிலான விவரங்களை எந்த அடிப்படையில் நாங்கள் தெரிவிக்க முடியும்.

அப்போலோ அளித்த சிகிச்சைக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கூட திருப்தி தெரிவித்திருந்தனர். ஜெயலலிதா மரண வழக்கில் நிறைய அரசியல் தலைவர்கள் இன்னும் விசாரிக்கப்படாமல் இருக்கும் நிலையில் எங்கள் மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைபட்சமானது.

இது எங்கள் நற்பெயர் சார்ந்த விவகாரம் என்பதால் இதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமை உண்டு. எங்கள் தரப்பு வாதங்களை நாங்கள் நீதிமன்றத்தில் கூறுகிறோம். இனி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராக மாட்டோம்.

ஆறுமுகசாமி ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆணையத்தில் நாங்கள் அளிக்கும் தகவல் எல்லாம் ஆணையம் வேண்டுமென்றே கசியவிடுகிறது.

அதுபோன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்போதைய அதிமுக அரசு சொன்னதால்தான் சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன. ஜெயலலிதாவுக்கு பிரைவசி தேவைப்படும் என்று அவர்கள் கூறியதால்தான் அகற்றினோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share