�வன்னியர் கண்ணில் வெண்ணெய்; மற்றவர் கண்ணில் சுண்ணாம்பா? உண்ணாவிரதப் போராட்டம்!

Published On:

| By admin

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த கோரி இன்று ஏப்ரல் 10ஆம் தேதி மதுரையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் வன்னியர் அல்லாத சமுதாயத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளித்து கடந்த அதிமுக அரசு நிறைவேற்றிய சட்டத்தை, தொடர்ந்து வந்த திமுக அரசும் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க, அதை எதிர்த்து தமிழக அரசு, பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்டோர் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
உச்சநீதிமன்றமும் இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்ட நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்களுக்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “அதிமுக அரசு கொண்டுவந்த சட்டமாக இருந்தாலும் இந்த சட்டத்தை உறுதிப்படுத்த நீதிமன்றத்தில் தமிழக அரசு திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது. இது மாநிலத்தின் சமூகநீதி பிரச்சனை என்பதால் இதை அரசு உறுதியாக நிலை நாட்டும். முந்தைய அரசின் அவசரக் கோல சட்டத்தால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை எப்படி உறுதி செய்தோமோ அதே போல இதையும் உறுதி செய்வோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி எம்பி தலைமையில் முதல்வரை சந்தித்து டாக்டர் ராமதாஸ் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடமும் உறுதிமொழி கொடுத்துள்ளார் ஸ்டாலின்.

10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒரு பக்கம் இதெல்லாம் நடந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் வன்னியர் தவிர 107 சமுதாயத்தினர் தமிழக அரசு வன்னியர்களின் கண்ணில் வெண்ணையும், மற்ற 107 சமுதாயத்தினரின் கண்களில் சுண்ணாம்பும் வைப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இன்று ஏப்ரல் 10ஆம் தேதி மதுரையில் சீர்மரபினர் நல சங்கம், சமூகநீதி கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் 107 சமுதாயத்தின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த வரும் விடுதலைக் களம் அமைப்பின் தலைவருமான நாகராஜன் நம்மிடம் பேசும்போது,

“தமிழ்நாடு அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மேலும் 2001 முதல் 2021 வரை தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் எந்தெந்த சமுதாயத்திற்கு எவ்வளவு அளிக்கப்பட்டது என்ற வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
ஒருவேளை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாமல் வன்னியர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால், எங்களின் இந்த உண்ணாவிரத போராட்டம் அரசுக்கு எதிராக அடுத்த கட்டத்துக்கு செல்லும்” என்று கூறினார்.

முன்னதாக நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய திராவிட கழகத் தலைவரும் வேட்டுவ கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவருமான ராஜ் கவுண்டர்,


“வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பிரச்சினை என்றவுடன் டாக்டர் அன்புமணி முதல்வரை சந்திக்கிறார். அவர்களுக்கு அரசியல் ரீதியாக மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ஆனால் வேட்டுவக் கவுண்டர் சமுதாயம் உள்ளிட்ட 107 சமுதாயத்தினருக்கு கல்வி வேலைவாய்ப்பு அரசியல் உள்ளிட்டவற்றில் எந்தப் பிரதிநிதித்துவமும் இல்லை. வன்னியர் சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் கடந்த ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தோடு போதிய தரவுகள் இல்லாமல் அவசர நோக்கத்தோடு இந்த சட்டத்தை நிறைவேற்றினார். அதை எதிர்த்து அப்போது அதிமுக கூட்டணியில் நாங்கள் வெளியே வந்தோம். திமுக கூட்டணியை ஆதரித்தோம்.
இந்த நிலையில் இப்போது சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி முடித்து அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குமாறு நாங்கள் முதல்வரை கேட்கிறோம். வன்னியர்களை விடவும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் பின்னடைந்த நிலையில் இருக்கும் எங்களது கோரிக்கையை முதல்வர் பரிசீலிக்க வேண்டும். எங்கள் கோரிக்கை தொடர்பாக முதல்வரை நேரில் சந்திக்க அமைச்சர் செந்தில்பாலாஜி மூலம் நேரம் கேட்டுள்ளோம். எங்கள் பிரச்சனையையும் முதல்வர் செவிமடுப்பார் என்று நம்புகிறோம்” என்கிறார்.

ஒரு பக்கம் மதுரையில் உண்ணாவிரத போராட்டம், இன்னொரு பக்கம் முதல்வரை சந்திக்க முயற்சி என வன்னியர் தவிர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் 107 சமுதாயத்தினரின் முயற்சி தொடர்கிறது.

**வேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share