முரசொலி வழக்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பட்டா உள்ளிட்ட ஆதாரங்களுடன்திமுக பதிலளிக்க இரு கட்சிகளுக்கும் இதனை முன்வைத்து மோதல் நீடித்தது.
இதனிடையே முரசொலி இடம் குறித்த தனது ட்விட்டர் பதிவுகளை நீக்கவேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதுபோலவே பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இல்லையென்றால் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ராமதாஸ் மற்றும் சீனிவாசன் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறி அவர்கள் மீது சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி டிசம்பர் 2ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது முரசொலி தொடர்பான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் 14ஆவது நீதிமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 21) விசாரணைக்கு வந்தது. திமுகவின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார். வழக்கினை விசாரித்த நீதிபதி, “ராமதாஸ் மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு எதிரான புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளது. ஆகவே இருவரும் வரும் மார்ச் 20ஆம் தேதி இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
**த.எழிலரசன்**
�,