ென்னையில் நடைபெற்ற ஈழத் தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் மே 22ஆம் தேதி மாலை 4 மணிக்கு பெசன்ட் நகரில் நடைபெறும் என்று மே 17 இயக்கம் அறிவித்தது. இதற்கு முதலில் வாய்மொழி அனுமதி வழங்கிய காவல் துறை நேற்று முன்தினம் நள்ளிரவு அனுமதி மறுத்தது. இந்த நிலையில் தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னெடுப்போம் என்று மே 17 இயக்கம் தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்று (மே 22) மாலை மே 17 இயக்கத்தினர் பெசன்ட் நகர் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு, பெரியாரிய அமைப்பினர், தமிழீழ செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பேரணியாகச் சென்றனர்.
அப்போது அவர்களை பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். நினைவேந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்றவர்களை கைது செய்தனர். திருமுருகன் காந்தி, வன்னியரசு உள்ள ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக, திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது அடிப்படை உரிமை. இதைத் தடுப்பதற்கு எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. இது ஒரு பண்பாட்டு நிகழ்வு, அரசியல் நிகழ்ச்சி எல்லாம் கிடையாது.
கடந்த முறை அதிமுக அரசு எடுத்த நிலைப்பாட்டை தற்போது திமுக அரசும் எடுத்திருக்கிறது என்பது ஜனநாயக விரோதமானது. இப்படி ஒரு தடையை திமுக கொண்டு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
தமிழகத்திலேயே ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தலை நடத்த முடியவில்லை என்றால் வேறு எங்கு நடத்துவது? இலங்கையில் சிங்கள மக்கள் நினைவேந்துகிறார்கள். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம் என்ன பிரச்சினை வரப் போகிறது? எந்த நெருக்கடியை எதிர்கொள்ளப் போகிறார்கள்? தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு மரியாதை செலுத்த அனுமதி கிடையாது என்று இந்திய அரசு சொல்வதைத் தமிழக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டதா? டெல்லி அரசு சொல்வதை எல்லாம் தமிழக அரசு ஏற்கிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறோம். இதுகுறித்து முதல்வர் வெளிப்படையான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அமைதியாக மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நடத்த அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்றும் முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.
சிங்கள மக்களுக்கு நிவாரணம் கொடுக்கும் திமுக அரசு ஈழத் தமிழர்களுக்கான நினைவேந்தலைத் தடுக்கிறது என்றால் என்ன அரசியல் இருக்கிறது. விநாயகர் சிலையைக் கடலில் கரைக்க அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் அரசு செய்யும்போது நினைவேந்தலுக்கு அனுமதியில்லை. திமுகவின் இரட்டை நிலைப்பாடு அப்பட்டமாகத் தெரிகிறது” என்று கூறினார்
**-பிரியா**