முல்லைப்பெரியாறு – 152அடியாக உயர்த்த நடவடிக்கை: துரைமுருகன்

Published On:

| By Balaji

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்த தொடர்ந்து எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக கேரள மாநிலத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி 136அடி நீர்மட்டம் வரும்போதே அணையைத் திறக்க வேண்டும் என்று கேரள அரசு சொல்கிறது. அதே சமயத்தில் அணை பாதுகாப்பாக உள்ளது அதன் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்று தமிழக அரசு கூறுகிறது.

இந்நிலையில் 4ஆவது முறையாக நேற்று முல்லைப் பெரியாறு அணை 142 அடியை எட்டியது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள துரைமுருகன், பருவ மழைக் காலத்தில், குறிப்பாக வெள்ளக் காலங்களில், காலமுறைப்படி வரும் வெள்ள நீரைத் தேக்கி வைத்து முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, அணையின் நீர்மட்டத்தை முன்கூட்டியே நிர்ணயித்து, அதன்படி அணையின் நீர்மட்டத்தை முறைப்படுத்துவது மாத வாரியான நீர்மட்ட அட்டவணை (Rule Curve) ஆகும்.

இதில் பருவ மழைக் காலங்களில் ஜூன் 10ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரையில் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் அணையின் நீர்மட்டம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

மத்திய நீர்வளக் குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாத வாரியான நீர்மட்ட அட்டவணைப்படி அணையில் நேற்று 30.11.2021 காலை 142 அடி வரை நீர் தேக்கப்பட்டுள்ளது.

அணைக்கு அதிகமாக நீர்வரத்து இருக்கும் நாட்களில், நிலையான வழிகாட்டுதலின்படிசம்பந்தப்பட்ட கேரள அதிகாரிகளுக்கு முன்னரே தெரியப்படுத்தி, அணையின் நீர் வழிந்தோடி மதகுகள் திறக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்படுவது படிப்படியாகச் செயல்படுத்தப்படுகிறது.

07.05.2014 அன்று உச்ச நீதிமன்றம் 142 அடி வரை தேக்கலாம் என ஆணையிட்ட பின்னர், நான்காவது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை முடித்த பின்னர், அணையின் நீர்மட்டத்தை 152 அடிவரை உயர்த்தலாம். இதற்கு சில இடையூறு இருந்தாலும், அப்பணிகளை முடிக்க, தொடர்ந்து எல்லாவிதமான முயற்சிகளும் நடவடிக்கைகளும் முதல்வருடன் கலந்து பேசி எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share