தமிழகத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதா என்பது குறித்து அரசிடம் விளக்கம் கேட்டு, பதிலளிக்குமாறு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை இருக்கிற வேளையில், தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையிலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன், தமிழக அரசுக்கு தெரியாமலே வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்து நேற்று செய்திகள் வெளியாகின. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்கட்சியினர் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழகத்திலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டது குறித்து தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கை இன்று(ஏப்ரல் 22) விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழகத்தில் போதிய அளவு ஆக்சிஜன் உள்ளதா, வென்டிலேட்டர் பற்றாக்குறை உள்ளதா? போதுமான அளவு ரெம்டெசிவிர் மருந்து இருப்பு உள்ளதா? உள்ளிட்டவை குறித்து தமிழக அரசிடம் விளக்கம் பெற்று மதியம் பதிலளிக்கும்படி தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை, தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற செய்திகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தப்படுகிறது.
குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கை எடுக்கவில்லை, ஆக்சிஜன் விவகாரத்தில் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டதுபோன்று தமிழகத்திலும் அந்த நிலை வந்துவிடக் கூடாது என்றும், தமிழகத்தில் நிலையை அறிய விரும்புவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு மீண்டும் 2.15 மணிக்கு விசாரணைக்கு வரும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
**வினிதா**
.�,