டெல்டாவில் நீரில் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் வேதனை!

Published On:

| By Balaji

டெல்டா பகுதிகளில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதனால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் கடந்த 30ஆம் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கி நேற்று மாலை வரை மழை தொடர்ந்தது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணி பகுதியில் 22 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

கனமழை காரணமாக டெல்டா பகுதிகளில் விளை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆகிய பகுதிகளில் பல இடங்களில் பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கின. கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளிலும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறையில் 10ஆயிரம் ஏக்கர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் 5 ஆயிரம் எக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வயல்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதாகவும் கூறுகின்றனர்.

விளை பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வரும் விவசாயிகள், எங்கள் உழைப்பு, பணம் என எல்லாம் வீணா போச்சு. இந்த வருடம் டெல்டா விவசாயிகளுக்குப் பெரு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என வருத்தம் தெரிவிக்கின்றனர். அதோடு அரசு சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், “காவிரி பாசன மாவட்டங்களில் மழையால் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். நவம்பர் மாத மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும் இழப்பீட்டை இதே அளவுக்கு உயர்த்தி, உடனடியாக வழங்க வேண்டும்” என்று பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share