தமிழ்நாட்டுக்கு புதிய உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள்: வேலை செய்த வெளிமாநில லாபி!

Published On:

| By admin

மின்னம்பலம் இதழில்  தெரிவித்திருந்தபடியே தமிழ்நாட்டின் உள்துறை, சுகாதாரத்துறை ஆகிய முக்கிய துறைகளின் செயலாளர்கள் இன்று (ஜுன் 12) மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த ஜூன் 8 ஆம் தேதி மின்னம்பலம் இணைய இதழில்,  [உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் மாற்றம்- முதல்வரின் அதிரடிப் பட்டியல்](https://minnambalam.com/politics/2022/06/08/20/home-health-secarataries-change-ias-officeres-transfer-cm-mkstalin-decesion) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில்,  “கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உள்துறை செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டார். ஆட்சி நிர்வாகத்தில் தலைமைச் செயலாளருக்கு அடுத்த நிலையில் பவர்ஃபுல் பதவியாக இருப்பது உள்துறை செயலாளர் பதவிதான். திமுக ஆட்சி அமைந்ததும் தலைமைச் செயலாளராக இறையன்புவை நியமித்த முதல்வர் ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையின் செயலாளராக பிரபாகரையே தொடர அனுமதித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவருக்கு மிகவும் வேண்டிய அதிகாரிகள் பட்டியலில் முக்கியமானவராக இருந்தவர் எஸ்.கே. பிரபாகர். ஆனபோதும் கடந்த ஒருவருட திமுக ஆட்சியிலும் அவரே உள்துறைச் செயலாளராக தொடர்ந்து வருகிறார். இவர் உள்துறைச் செயலாளராக பதவியேற்று வரும் நவம்பரோடு மூன்றாண்டு காலம் முடிகிறது.
இந்தப் பின்னணியில் புதிய உள்துறை செயலாளர் யார் என்ற ஆலோசனை கடந்த சில வாரங்களாகவே முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் நடந்திருக்கிறது. உள்துறை செயலாளர் என்ற முக்கியமான பதவியை கைப்பற்ற சில அதிகாரிகள் முயற்சித்து வருகிறார்கள். தற்போதைய சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன் பெயர் கூட உள்துறை செயலாளர் பதவிக்கான உத்தேசப் பட்டியலில் இருந்தது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த வெளி மாநில அதிகாரிகள், ‘தமிழ்நாடு அரசின் முக்கியமான பதவிகளான தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி போன்ற அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே தரப்பட்டிருக்கிறது. நாமும் தமிழ்நாட்டில்தான் நீண்ட ஆண்டுகள் பணியாற்றி வருகிறோம். எனவே முக்கிய பதவிகளுக்கு வெளி மாநில அதிகாரிகளையும் பரிசீலிக்க வேண்டும்’ என்று தங்களுக்குள் ஆலோசித்து அதன்படியே சில லாபிகளையும் செய்யத் தொடங்கினார்கள்.

இந்த வகையில் உள்துறை செயலாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி (பஞ்சாப்), வணிக வரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி(ஆந்திரா), வணிக வரித்துறை செயலாளர் சிவதாஸ் மீனா (ராஜஸ்தான்) ஆகிய வெளிமாநில அதிகாரிகளின் பெயர் பரிசீலனை செய்யப்படுகிறது” என்று தெரிவித்திருந்தோம்,
நமது செய்தியில் குறிப்பிட்டது போலவே உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே. பிரபாகர் இன்று (ஜுன் 12) மாற்றப்பட்டு  வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தமிழ்நாடு கேடர் வெளி மாநில அதிகாரியான ஆந்திராவைச் சேர்ந்த பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல  சுகாதாரத்துறை செயலாளார் ஜெ.ராதாகிருஷ்ணன் கூட்டுறவு,  உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மின்னம்பலம்  செய்தியில்,  “  சுகாதாரத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் செந்தில் குமார் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்படலாம்”  என்று தெரிவித்திருந்தோம்.அதன்படியே இன்று வெளிவந்த  மாற்றப் பட்டியலில்,  “சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியான டாக்டர் செந்தில் குமார் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் சில அதிகாரிகளும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு அடுத்த பவர்ஃபுல் பதவியான உள்துறை செயலாளராக  உடனே  பொறுப்பேற்கிறார் பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ்.

-**வணங்காமுடிவேந்தன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share