ாநிலங்களின் உரிமைகளும் அதிகாரங்களும் பறி போவதைத் தடுக்கும் வகையில் முதல்கட்டமாக தென்னிந்திய மாநில முதல்வர்களின் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திட வேண்டும் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று (ஏப்ரல் 9ஆம் தேதி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டார். மத்திய மாநில உறவுகள் என்ற தலைப்பில் நேற்று நடந்த கருத்தரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்பட்ட அதிகார வரம்பை ஒன்றிய அரசு அடிக்கடி மீறுகிறது. தன் அதிகார எல்லைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மாநிலங்களின் அதிகாரங்களை ஆக்கிரமித்து வருகிறது.
மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை அடிபணியச் செய்யும் நோக்கத்துடன் அதிகாரங்களைக் குவிக்கும் போக்கை ஒன்றிய அரசு கொண்டுள்ளது. இதுபோன்ற போக்கை ஆங்கிலேயர்கள்கூட மேற்கொள்ளவில்லை” என்று ஸ்டாலின் கூறினார்.
மேலும் அவர், “டெல்லியில் உள்ள ஆட்சியாளர்கள், மாநிலங்களைத் தங்களுக்கு அடிபணியச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால், அது மக்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா?
நாடாளுமன்றத்தில் இப்போது எந்த விவாதமும் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அங்கே எழுப்பப்படும் எந்த கேள்விகளுக்கும் சரியான பதில்கள் இல்லை. டெல்லியில் உள்ள அரசாங்கம் எதற்கும் பொறுப்பேற்காத வகையில் செயல்படுகிறது.
மாநில அரசுகளை மட்டுமல்ல… கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களைக்கூட தன் கட்டுப்பாட்டில் வைக்க, ஒன்றிய பாஜக அரசு அதிகார தாகத்துடன் செயல்படுகிறது.
தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால், அவர்கள் ஒவ்வொரு செயலையும் செய்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர் அலுவலகத்தைப் பயன்படுத்தி செயல்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுநர் வசம் நீட் தேர்வு விலக்கு மசோதா உட்பட 11 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. எட்டு கோடி மக்களை விட ஒரு நியமன ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருக்கிறதா என்ன?
இந்த இடையூறுகளை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் மாநிலங்கள் அரசியல் தாண்டி ஒன்றிணைய வேண்டும். தென்னிந்தியாவின் முதலமைச்சர்கள் ஒரு குழுவை உருவாக்க வேண்டும். பின்னர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களையும் அதில் சேர்க்கலாம்” என்று ஆலோசனை கூறிய தமிழக முதல்வர்,
“மாநிலங்களுக்கு அதிக உரிமைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். இதை நிறைவேற்ற, அரசியலின் எல்லைகளைத் தாண்டி நாம், ஒன்றிணைய வேண்டும்.
மேலும் ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே இந்த நாட்டின் வாழ்வாதாரத்தையும், சமூக நீதி, சமத்துவம் மற்றும் மதச் சார்பின்மையின் லட்சியங்களைக் காப்பாற்ற முடியும். அத்தகைய வெற்றியை உறுதிசெய்ய ஒவ்வொரு தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன். மாநில சுயாட்சிக்காகப் போராடுவோம். உண்மையான கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்” என்று உரையாற்றினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
**வேந்தன்**