பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டம் வாபஸ்: விவசாயிகள் மகிழ்ச்சி!

Published On:

| By Balaji

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டல திட்டம் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதற்கு விவசாயிகள் சங்கம், அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி வந்தது.

நாகப்பட்டினம் பகுதியில் ரூ.31,580 கோடி மதிப்பீட்டில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திகரிப்புத் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. அவ்வாறு அமைக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசின் தொழில் முதலீட்டு அமைப்பு மேற்கொண்டது.

இதற்கு டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்த ஒப்பந்த புள்ளியை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நாகை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம் சாா்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்காக அரசின் சாா்பில் திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக கோரப்பட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை எந்தவிதப் போராட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் அரசு கைவிட்டிருக்கிறது. எனவே, பெட்ரோ கெமிக்கல் மற்றும் ஹைட்ரோகார்பன் நிறுவனங்களால் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து முற்றிலும் விலகிவிட்டதாக நான் கருதவில்லை. பின்னாளில் ஏதேனும் புதிய பெயரில் அந்த நிறுவனங்கள் காவிரிப் படுகைக்குள் நுழையக்கூடும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட தொழில்கள் பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லை என்பதைப் பயன்படுத்தி, அந்த நிறுவனங்கள் பின்னாளில் தங்களின் திட்டத்திற்கு ஒப்புதல் பெறக்கூடும்.

இதைத் தடுக்கும் வகையில், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட விவசாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அனைத்துத் தொழில்களையும் சேர்க்க வேண்டும். அதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அதுபோன்று இத்திட்டம் வாபஸ் பெறப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் சங்கங்களும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share