ஐபிஎல் 2021 தொடரில் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு பாராட்டு விழா இன்று (நவம்பர் 20) சென்னையில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், தோனி, ஐசிசி தலைவர் ஜெய் ஷா,கபில் தேவ் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரை பாராட்டும் இந்த வாய்ப்புக்கு மகிழ்கிறேன். சென்னை என்றாலே சூப்பர்தான். நான் இங்கே இருந்தாலும் என் மனது சென்னையில் கடந்த பத்து நாட்களாக பாதித்திருக்கும் வெள்ளம் பற்றியே இருக்கிறது. இதற்கிடையில் ஒரு இளைப்பாறலாகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். நானும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவன்தான், மேயராக இருந்தபோது காட்சிப் போட்டிகளில் விளையாடியுள்ளேன்.
தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட். . ஆனால் இப்போது ஏறத்தாழ அவர் சென்னைவாசியாகவே மாறிவிட்டார். தமிழ்நாட்டின் செல்லப் பிள்ளையாகவே ஆகிவிட்டார். தமிழர்கள் பச்சைத் தமிழர்கள், தோனி மஞ்சள் தமிழர். தமிழர்கள் எல்லாருக்கும் பிடிக்கும்போது தலைவர் கலைஞருக்கு பிடிக்காமல் இருக்குமா? எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் கலைஞரும் சரி, தோனியும் சரி கூலாக இருப்பார்கள். நெருக்கடியில் இருந்து எப்படி மீண்டு எழுந்து வருவது என்பதை இருவருமே நிரூபித்தவர்கள். தோனியை தலை சிறந்த ஃபினிஷர், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என்று பார்ப்பதை விட அவரை சிறந்த கேப்டனாகவே பார்க்கிறேன். சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து அசாதாரண உயரத்தைத் தொட்டவர் என்பதால்தான் தலைவர் கலைஞரும் தோனி மீது அன்புகொண்டிருந்தார். அடுத்து அமைச்சரவைக் கூட்டம் இருப்பதால் நான் போயாகவேண்டும்.
எப்போதுமே இலக்கு முக்கியம், அதை அடைய உழைப்பும் முக்கியம். இது விளையாட்டுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் பொருந்தும். சீனிவாசன் சிமெண்ட் பற்றி அறிந்தவர். அதனால்தான் தனது அணியை உறுதியோடு வைத்திருக்கிறார். தோனி மீண்டும் பல சீசன்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமை தாங்க வேண்டும். நீங்கள் உங்கள் விளையாட்டைத் தொடருங்கள். நாங்கள் எங்கள் பணிகளைத் தொடருகிறோம்” என்று பேசினார் மு.க.ஸ்டாலின்.
முதல்வரின் பேச்சுக்கு தோனியின் சிக்ஸர்களை போல கைதட்டல்கள் எழுந்துகொண்டே இருந்தன.
** வேந்தன்**
�,