பாஜகவால் சிறைவைக்கப்பட்ட 19 எம்.எல்.ஏ.க்கள்: ஆளுநரிடம் கமல்நாத்

Published On:

| By Balaji

மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் இன்று (மார்ச் 13) அம்மாநில ஆளுநர் லால்ஜி டண்டனை சந்தித்து, மாநிலத்தில் பாஜக நடத்தும் குதிரை பேரங்களை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் பிரமுகர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்ததை அடுத்து அவரது ஆதரவு எம்,எல்.ஏ.க்கள் தற்போது பெங்களூருவில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆளுநரை சந்தித்தபோது அவரிடம் விரிவான கடிதம் ஒன்றையும் அளித்துள்ளார் முதல்வர் கமல்நாத். அந்தக் கடிதத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்களை பாஜகவினர் சட்டவிரோதமாக நெறிமுறைகளுக்கு மாறாக கடத்திச் சென்று பெங்களூருவில் சிறை பிடித்து வைத்திருப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச அரசைக் கவிழ்க்க பாஜக நடத்திய முயற்சிகள் பற்றி அக்கடிதத்தில் விளக்கியுள்ளார் கமல்நாத்,

“மார்ச் 3 ஆம்தேதி நள்ளிரவிலேயே காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூருவுக்கு கொண்டு செல்ல பாஜகவினர் முயன்றனர். ஆனால் அப்போது காங்கிரஸ் தலைவர்கள் அந்த திட்டத்தை முறியடித்தனர். முதல் திட்டம் முறியடிக்கப்பட்டதன் விளைவாக மார்ச் 8 ஆம் தேதி மூன்று தனி விமானங்களை ஏற்பாடு செய்து அதில் 19 காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பாரதிய ஜனதா கட்சியினர் பெங்களூருவுக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த 19 எம்எல்ஏக்களில் 6 பேர் மாநில அரசில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாஜகவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ரிசார்ட்டுகளில் தங்கவைக்கப்பட்டிருப்பதால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த 19 எம்எல்ஏக்களும் வெளி தொடர்புகள் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையுடன் தடுத்து சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இதைவிட அதிர்ச்சியாக மூத்த பாஜக தலைவர்கள் மார்ச் 10 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சபாநாயகரின் வீடு தேடிச் சென்று அந்த 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் கொடுத்துள்ளார்கள். ராஜினாமா செய்வதாக சொல்லப்படும் 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவர்கூட சபாநாயகர் இல்லத்துக்கு நேரில் செல்ல வில்லை. இது மிகவும் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கையாகும். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் எவ்வாறு சபாநாயகரிடம் கொடுக்க முடியும்? இதிலிருந்தே இந்த சதித் திட்டத்திற்கு பின்னால் முழுக்க முழுக்க பாஜக இருக்கிறது என்பது தெளிவாகிறது.

மார்ச் 12 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் அமைச்சர்கள் பட்வாரி, லக்கன் சிங் யாதவ் ஆகியோர் பெங்களூருவுக்கு கூட்டிச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏவான மனோஜ் சவுத்ரியின் தந்தை நாராயன் சிங் சவுத்ரியோடு பெங்களூர் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் மூவரும் காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சவுத்ரியை சந்திக்க முயன்றபோது பாஜக குண்டர்களாலும், கர்நாடக போலீசாராலும் தாக்கப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அளவு சட்டத்தை உடைத்து மத்திய பிரதேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை நிலைகுலைய வைக்க முயற்சி மேற்கொள்கின்றனர் பாஜகவினர்.” என்று குறிப்பிட்டுள்ள கமல்நாத் தொடர்ந்து அந்தக் கடிதத்தில்,

“இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜனநாயகம் மத்திய பிரதேசத்தில் கடுமையான ஆபத்தில் இருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் சபாநாயகரை சந்தித்து கொடுத்தது முதல் அனைத்தையும் விரிவான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு பொறுப்பான காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் எனது அரசாங்கத்தின் பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். மார்ச் 16ஆம் தேதியன்று சபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

ஜனநாயகத்தின் மீதும் சட்டமன்ற நடைமுறைகள் மீதும். அரசியலமைப்பின் மீதும் ஒரு சிறு கல் எறியக் கூட விடமாட்டோம் என்பதை மத்திய பிரதேச மக்களுக்கு நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம் மாநிலத்தின் அரசியல் அமைப்பு தலைமையான ஆளுநர் விவகாரத்தில் தலையிட்டு மத்திய உள்துறை அமைச்சருடன் இணைந்து பெங்களூருவில் சிறை வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என அந்த கடிதத்தில் முதல் அமைச்சர் கமல்நாத் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கமல்நாத். “சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை விடுவித்தால் மட்டுமே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும்” என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.

**-வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share