ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த தயாராகும் தமிழ் திரையுலகம்

politics

இந்திய அரசியலில் தமிழக அரசியலும், சினிமாவும் வேறுபட்டது. பிற மாநிலங்களில் சினிமாவும் அரசியலும் நீரும் எண்ணையுமாகவே இருந்து வருகிறது.

தமிழகத்தை கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்ட கட்சிகளின் தலைவர்கள் சினிமாவில் பிரபலமாகி அரசியல் தலைவர்களாக வளர்ந்தவர்கள். அதனால் சினிமா அவர்களின் தாய் வீடாக மாறிப்போனது. இதன் காரணமாக எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக திரையுலகினர் சார்பில் முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துவது வாடிக்கையாகி போனது, அப்படி நடத்தாத சூழ்நிலையில் ஆளுங்கட்சியே விழாவை நடத்துமாறு அறிவுறுத்துவதும் உண்டு.

கடந்த ஒரு வருடகாலமாக கொரானா காரணமாக சினிமா தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுவருகிறது. பிற தொழில்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் போன்று சினிமா தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை.

இந்தியா முழுவதும் திரையரங்குகளில் விற்கப்படும் டிக்கட்டுகளுக்கு GST மட்டுமே செலுத்தும் நடைமுறை உள்ளது தமிழகத்தில் உள்ளாட்சி வரி 8% விதிக்கப்படுகிறது. இதனை ரத்து செய்யுமாறு கடந்த நான்கு வருடங்களாக அதிமுக அரசிடம் முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை.

சினிமா தொழில் சந்தித்து வரும் நெருக்கடியில் இருந்து மீளவும், வரி சலுகைகளை பெறவும் தமிழக முதல்வராக முதன்முறையாக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தனித்தனியாக திட்டமிட்டு அதற்கான ஆரம்ப கட்ட பணிகளை ஒரு வார காலத்திற்கு முன்பாகவே தொடங்கியுள்ளனர். ஆனால் இருதரப்புக்கும் மு.க.ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தவிதமான உத்திரவாதமும் கொடுக்கப்படவில்லை.

இன்றைய தினம் தேர்தல் முடிவுகள் அடுத்து திமுக தலைமையிலான ஆட்சி என்பதை உறுதிப்படுத்தி இருப்பதால் பாராட்டு விழாவுக்கு தேதி வாங்குவதற்கு ஒரு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியையும், தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் தங்கள் உறுப்பினர் உதயநிதியையும் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

**-ராமானுஜம்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *