திராவிடத் தொட்டிலாடும் தமிழன்னை!

politics

– ஸ்ரீராம் சர்மா

திண்ணையில் சுவர்க்கம் காணும் வாயாடிகள், அதில் மாந்தோரணமும் கட்டிக் கொடுத்தால் துள்ளிக் குதிக்க மாட்டார்களா?

ஆர்டிக்கின் ஆழம் தெரியுமா? அண்டார்டிக்கின் நீளம் தெரியுமா என்றெல்லாம் அளக்க மாட்டார்களா? வாய் பிளந்து கேட்கும் நூறு பேரை பிடித்துக்கொள்ள காசு தரும் ஆண்டகை ஆங்கிருக்க வாய் நீளம் காட்டத் தயங்குவார்களா?

கூட்டியே விட்டார்கள் கச்சேரியை ‘தமிழா திராவிடமா’ என்னும் போர்வையில். அந்த வாடகை மேடையைக் குறித்து அதிகம் பேச ஏதுமில்லை என்றாலும், அந்த நபும்சக நாடகத்தின் பித்தலாட்டங்களை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி எச்சரிக்க வேண்டியது நமது கடமையாகிறது.

தமிழ் தேசியமானது திராவிடத் தீப்பிழம்பின் உள்நாக்கு என்பதை அறியாத சிலர், தங்கள் மன அரிப்பைத் தீர்த்துக்கொண்ட விரக்திக் கதை அது.

ஆயிரத்து எண்ணூற்றில் அவர் சொன்னார் – இவர் சொன்னார், ஆதிக்கட்சி அப்படிச் சொன்னது, நீதிக்கட்சி இப்படிச் சொன்னது என திண்ணையேறும் இன்றைய தன்முனைப்பு வாதங்கள் அனைத்தும் கூலிக் குரல்களே…

உயர்ந்து நிற்கும் எளிய உண்மை திராவிடம் பூகோள அடையாளம் என்பதே!

கண்ணாரக் காணும் இந்திய வரைபடம் அதைத்தான் முன் மொழிகிறது. காதாரக் கேட்கும் ‘திராவிட உத்கல…’ என்னும் இந்திய தேசிய கீதம் அதைத்தான் வழி மொழிகிறது!

உண்மையில், விடுதலைக்குப் பிறகெழுந்த தென்னக தலைமைக்கான வல்லாட்டங்களால் அன்றைய ஒன்றியம் திக்கித் திணறி வழியறியாது கண்டதே ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என்னும் மாநிலப் பிரிவுகள்…

என்னதான் பிரித்தாலும் திராவிட மண்ணின் ஆதியும் நீதியுமானது தமிழ்நாடே!

தமிழும் திராவிடமும் ஒன்றே என்பதை அறிந்தும் அறியாததுபோல நாடகமாடும் அவர்களை என்ன சொல்லி அழைப்பது?

சங்கத்தமிழில்கூட திராவிடம் என்ற சொல் இல்லையே என மூளை கசக்கப் பார்க்கும் அவர்களின் மன அழுக்கை எந்த சலவைச் சாலையில் வைத்து வெளுப்பது?

சங்க காலத்தில் இருந்த எல்லைகள் வேறு. சேர சோழ பாண்டியர்கள் தங்கள் அரசாட்சியில் கண்ட எல்லைகள் வேறு. சுல்தானிய ஆட்சியிலும் அதன்பின் வந்த ஆங்கிலேய ஆட்சியிலும் அமைந்த எல்லைக்கோடுகள் வேறு வேறு…

அதன்பின் எழுந்த எல்லைக் கோட்பாடே திராவிடம்! அது, தென்னகம் ஆகும்!

தமிழ்நாட்டு அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வரையிலும் நம்மால் மனமுருகப் பாடப்படும் தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்..’ எனப் போற்றிப் பாடுகிறார் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையவர்கள்!

அவர் சொல்லும் தக்காண பீடபூமி ஏறத்தாழ ஏழு லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்புடையது. ‘அதில் சிறந்த திராவிட நல்திருநாடு’ என அவர் பாடுவது தக்காணத்துக்கு முக்கால் பாகம் கொண்டது. எனில், அது ஆந்திர, கர்நாடக, கேரள எல்லைகளை உள்ளடக்கியதாகவே கொள்ள முடிகிறது!

அதுபோக, தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய மனோன்மணீயம் பெ.சுந்தரனார் கேரள ஆலப்புழாவில் பிறந்தவர் என்பதை எப்படி இவர்களுக்குப் புரியவைப்பது?

கால்டுவெல் இவருக்கு மூத்தவர்தான் எனினும், 1876இல் பி.ஏ பட்டம் பெற்றுவிட்ட, திருநெல்வேலி தமிழ்க் கலாசாலையின் தலைவராக இருந்த, சைவப்பிரகாச சபையினை தோற்றுவித்த, ராவ்பகதூர் பட்டம் பெற்ற சுந்தரம் பிள்ளை அவர்களுக்கு கால்டுவெல்லை வழிமொழியும் அவசியம் இருந்திருக்க முடியாது.

1897இல் மறைந்த பிள்ளையவர்கள் திராவிடம் என்னும் எல்லைக் கோட்பாட்டை தன்னெழுச்சியாகவே அறுதியிட்டு சொல்லிச் சென்றார் என்பதை எந்த மலையேறி இவர்களுக்குச் சொல்வது?

குறித்துக்கொள்ளுங்கள்… தமிழ் மொழி அன்றைய நாளில் ஐந்து லட்சம் சதுர கிலோமீட்டருக்கு பரவலாகப் பேசப்பட்ட மொழி. அதனால்தான் அதனை திராவிட மொழி என்கிறோம்!

அதனில் இருந்து கிளைத்த செழித்த மொழிகளே தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மற்ற திராவிட மொழிகள் என்பது போதும் போதுமெனும் அளவுக்கு ஆய்ந்து சொல்லப்பட்டாகிவிட்டது!

இந்திய வரை படம் தென்னகத்தைப் பிரித்துக் காட்டுவதன் காரணம் என்ன? அது வடமாநில கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்ட தனித்த பிரதேசம் என்பதால்தானே ?

அப்படிக்கொள்வது இந்திய தேசியத்துக்கு அப்பாற்பட்டதாகி விடாது. திராவிடம் என்பது இந்தியத்தின் பெருங்கூறு! போலவே, சமஸ்கிருதம் என்பதை வடமாநிலங்களுக்கு மட்டுமே சொந்தமானது என தம்பட்டமடித்துக் கொள்ளவும் முடியாது. அதுவும், திராவிடப் பெருமண்ணில் திரண்டு புழங்கிய மொழியே! ஆதியில் அதன் செறிவுகளை தன்னுள் அடக்கிச் செழித்த முதல் மொழி தமிழே!

தமிழைக் காட்டிலும் மேலதிக சொற்களைப் புணர்ந்ததால், மற்ற மற்ற மொழிகள் தாய்த் திராவிட தமிழில் இருந்து சற்றே விலகி அதனதன் வட்டார வழக்கையும் கொண்டு கூட்டிச் செழித்தன.

ஆகவேதான், “திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான்” என்றார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

திராவிடம் என்றாலே அவர்களுக்கு கசக்கிறது. தமிழும் திராவிடமும் ஒன்றென்றால் அவர்களுக்கு வயிறு பிசைகிறது. உடல் வேறு உயிர் வேறு என அடம்பிடிக்கும் அவர்களை எந்த மருந்து கொண்டு உய்விப்பது?

நாட்டை மொழி வாரியாக பிரித்தது போதாது என்று இன்று மாநிலத்தையும் மொழிவாரியாக பிளக்க எண்ணுகிறார்கள். அவர் தெலுங்கர், இவர் மலையாளி, அவர் கன்னடர், இவர் மராத்தி, என பிரிவினை பேசி ஒன்றுபட்டு வாழும் மக்களுக்குள் வேற்றுமையை விஷத்தைப் புகுத்தப் பார்க்கின்றனர்.

தமிழை ஆண்டாண்டுக் காலமாக உயர்த்திப் பிடித்து வரும் திராவிடம் மற்ற மொழியாளர்களின் மீது என்றுமே வன்மம் பாராட்டியதில்லை. ஆனால், இன்று முளைத்திருக்கும் சிலர் அந்தக் கலகத்தை முன்னெடுத்திருப்பது துரதிர்ஷ்டம்!

பிராமணர்களை எதிர்க்க மட்டுமே தோன்றியது திராவிடம் என்கிறார்கள். உண்மையில், திராவிடம் என்பது ஆதிக்கத்தை எதிர்த்து எழுந்ததே! அன்று ஆதிக்கம் செலுத்தும் நிலையில் பிராமணர்கள் இருந்ததால் அவர்கள் எதிர்க்கப்பட்டார்கள்.

இன்று, திராவிட சமூக நீதிக் கோட்பாடுகளின் வீரியத்தால் அனைவரும் உயர்ந்த நிலையில் நிற்கிறார்கள். சாதிகளுக்குள் சமரசம் காண்பதே திராவிடக் கோட்பாடு. அதற்கு எதிராக பார்ப்பனீயம் அல்ல, எது நின்றாலும் அதை திராவிடம் எதிர்க்கும்.

தமிழிடமிருந்து திராவிடத்தையும், திராவிடத்திலிருந்து தமிழையும் பிரித்துப் பேச பிணை கொடுப்பது சாடிஸ்டுகளுக்கே உண்டான கொடுங்கோன்மை!

முடிவாக…

தமிழ் என்பது அன்றைய பரந்த திராவிடத்தின் அறிவிக்கப்படாத ஆட்சி மொழியாக இருந்தது உண்மை. காலப்போக்கில் தமிழின் உடன்பிறப்பு மொழிகளாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியன தோன்றியது உண்மை. அன்றாண்ட ஒன்றிய அரசால் திராவிட நிலம் மொழி வாரியாக பிரிக்கப்பட்டது உண்மை.

நிலமாகப் பிரிந்தாலும் மூல மொழியான தமிழ், தன் பழைய திராவிட பாசத்தோடு அனைவரிடமும் சகோதரம் பாராட்டி வருவது உண்மை.

தமிழ்நாட்டைத் தூக்கி நிறுத்திய சகலருக்கும் மொழி பேதமின்றி நன்றி பாராட்டும் ஆட்சி இங்கு நடப்பது உண்மை! அதுதான் தமிழ்நாட்டுக்குண்டான திராவிடத் தனித்தன்மை!

திராவிடத் தொட்டிலாடுகிறாள் தமிழன்னை என்பது ஊழிக்கடங்காத பேருண்மை!

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0