மோடியை சிக்க வைக்கும் அமித் ஷா: மார்க்சிஸ்ட்டின் பட்டியல் !

Published On:

| By Balaji

பிரதமர் மோடி நேற்று (டிசம்பர் 22) டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பி வருகின்றன. என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதைப் பற்றி 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது முதல் இப்போது வரை எங்கேயும் பேசவில்லை, விவாதிக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரதமரின் நேற்றைய பேச்சு உண்மைக்கு மாறான பொய்களின் தொகுப்புரையாக அமைந்திருந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு இன்று (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது. இதுபற்றி பிரதமரின் பொய்கள் என்று அக்கட்சி பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, “ நான் 130 கோடி இந்திய குடிமக்களுக்கு சொல்ல விரும்புகிறேன், எனது அரசு அதிகாரத்துக்கு வந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து என்.ஆர்.சி குறித்து இன்று வரையில் ஒரு முறை கூட பேசவில்லை என்று பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால், பாஜக, 2019 ஆம் ஆண்டில் தனது தேர்தல் அறிக்கையில் நாடு முழுவதும் என்.ஆர்.சி அமலாக்கப்படும் என உறுதியளித்திருந்தது.

நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, மக்களவையில் நவம்பர் 9 அன்று, “நாடு முழுவதும் என்.ஆர்.சி கொண்டுவந்து அமலாக்குவோம், ஊடுருவிய ஒரே ஒருத்தரைக் கூட விட்டுவைக்க மாட்டோம்” என்று பேசினார்.

என்.ஆர்.சி திட்டம், என்.பி.ஆர் என்ற மக்கள் தொகை பதிவேட்டு வேலைகள் (ஏப்ரல் 1 – செப்டம்பர் 30, 2020) முடிந்த பிறகு தொடங்கும். என்.பி.ஆர். என்பது என்.ஆர்.சி திட்டத்தின் முதல் கட்டம். அரசிதழில் இது கடந்த 2019 ஜூலை 31 அன்று வெளியிடப்பட்டது.

அடுத்ததாக, “நாட்டில் தடுப்பு முகாம்கள் எங்கேயும் இல்லை” என தெரிவித்தார் மோடி.

கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி மாநிலங்களவையில் உள்துறை அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு சொன்ன பதிலில், “அனைத்து மாநிலங்களிலும் சட்ட விரோத குடியேறிகள் மற்றும் தண்டனை உறுதி செய்யப்பட்டு நாடு கடத்தப்படவேண்டிய அந்நியர்களையும் அடைப்பதற்காக தடுப்பு முகாம்களை கட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி, தடுப்பு முகாம்கள் கட்டுவது பற்றிய வழிகாட்டுதல்களின் தொகுப்பினை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியிருக்கிறது.

மத்திய அரசு கடந்த நவம்பர் 28 ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ‘ நம் நாட்டில் சட்டவிரோதமாக வாழும் அந்நிய தேசத்தவர்களுக்கான தடுப்பு முகாம் அமைப்பதற்கு அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு கடிதமும், 2018 ஆம் ஆண்டு அந்தப் பணிகளின் நிலை அறிய ஒரு கடிதமும் எழுதப்பட்டது’ என தெரிவித்தது.

கடந்த நவம்பர் 2019 இல், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது அசாம் தடுப்பு முகாம்களில் குடியேறிகளாக சந்தேகிக்கப்படுவோர் தடுத்துவைக்கப்பட்டு அதில் 28 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவித்தார். 988 அந்நியர்கள் அசாமில் உள்ள தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் எண்ணிக்கையை வெளியிட்டார்.

2014 ஏப்ரல் 24/29 ஆகிய தேதிகளிலும், 2014 செப்டம்பர் 9/10 ஆகிய தேதிகளிலும் வழிகாட்டுதல்கள் இந்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அனுப்பப்பட்டன. அவற்றை அடிப்படையாக கொண்டு மாதிரி தடுப்பு முகாம்கள்/தங்கும் மையம்/முகாம் மாதிரி ஆகியவை அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களுக்கும் 2018 இல் அனுப்பப்பட்டது.” என்றும் மார்க்சிஸ்ட் கட்சி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதாவது பிரதமர் மோடி ராம் லீலா மைதானத்தில் பேசியதற்கு 100% முரண்பாடாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். அவை ஆவணங்களாக அவைக் குறிப்புகளில் பதிவாகியிருக்கின்றன. இந்நிலையில் மோடியின் பேச்சு உண்மைக்குப் புறம்பானது என்பதை அமித் ஷாவின் நாடாளுமன்ற உரைகளின் மூலமே எடுத்துக் காட்டியிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.

மேலும், “நான் யாருடைய மதத்தையும் குறிப்பிட்டு பேசியதே இல்லை என்றார் மோடி. ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தியில் நடைபெற்ற தேர்தல் பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, வன்முறையில் ஈடுபடுவோர் யார் என்பதை அவர்களுடைய உடையை வைத்துக் கண்டுபிடிக்க முடியும் என்றார். 2019 பொதுத்தேர்தலில் மோடி, வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்ந்தெடுத்திருப்பதற்கு காரணம் “பெரும்பான்மைகள் சிறுபான்மையாக உள்ள தொகுதி” என்றார்” என்று பட்டியலிட்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel