அரசியல் விளையாட்டு: ராஜீவ் பெயரை நீக்கிய மோடி

politics

இந்தியாவின் விளையாட்டுத் துறைக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற விருதின் பெயரில் இருந்து ராஜீவ் காந்தி பெயரை நீக்கி அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

“கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தியான் சந்த் என்று பெயரிடுமாறு இந்தியா முழுவதிலுமிருந்து பல கோரிக்கைகளை நான் பெற்று வருகிறேன். அவர்களின் கருத்துக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். அவர்களின் உணர்வை மதித்து, இனி கேல் ரத்னா விருது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்று அழைக்கப்படும் ” என்று பிரதமர் மோடி இன்று ட்விட் செய்துள்ளார்.

விளையாட்டுத் துறைக்காக நாட்டின் உயரிய விருதான கேல் ரத்ன விருது 1991-1992 இல் காங்கிரஸ் ஆட்சியில் நிறுவப்பட்டது. இந்த விருதை முதலில் பெற்றவர் தமிழ்நாட்டின் மிக புகழ்பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்.

டென்னிஸ் நாயகன் லியாண்டர் பயஸ், கிரிக்கெட் மன்னன் சச்சின் டெண்டுல்கர், ஹாக்கி ஜாம்பவான் தன்ராஜ் பிள்ளை மற்றும் புல்லேலா கோபிசந்த், அபினவ் பிந்த்ரா, அஞ்சு பாபி ஜார்ஜ், மேரி கோம் மற்றும் ராணி ராம்பால் ஆகியோர் இந்த விருதைப் பெற்ற பிரபலமான விளையாட்டு வீரர்கள்.

விருதுக்கு தற்போது பெயராகியுள்ள மேஜர் தியான் சந்த் ஒரு ஹாக்கி வீரர். 1926 முதல் 1949 வரை சர்வதேச ஹாக்கி விளையாடினார். அலகாபாத்தில் பிறந்த தியான் சந்த், 1928, 1932 மற்றும் 1936 இல் தங்கப் பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

கேல் ரத்னா விருதை தவிர விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்கு தியான் சந்த் விருது 2002 இல் இருந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

விளையாட்டு விருதுகளின் பெயர்கள் விளையாட்டு வீரர்களின் பெயர்களிலேயே இருக்க வேண்டும், அரசியல்வாதிகளின் பெயரால் இருக்கக் கூடாது என்று சொல்லி இந்த முடிவை வரவேற்கிறார்கள். அதேநேரம் அகமதாபாத்தில் இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு பிப்ரவரி 2020 இல் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று பெயரிடப்பட்டது. அதையும் மாற்றி விளையாட்டு வீரரின் பெயர் சூட்ட வேண்டும் என்றும் பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0