மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த மோடி பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பஞ்சாப்பில் பிரதமருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி விருதுநகர் வந்து 11 மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சிகளைத் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அன்றைய தினம் மதுரையில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி நடைபெறும். இதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதைக் கவனத்தில் கொண்டு மோடி பொங்கல் நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார். ஒமிக்ரான் பரவல் காரணமாக, தற்போது நடத்த வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். வருகின்ற காலத்தில் பிரதமரை வைத்து மதுரையில் மற்றுமொரு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
தொடர்ந்து விருதுநகர் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “பிரதமரின் பிற நிகழ்ச்சிகள் எல்லாம் தமிழக அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் என்பதால், அதுகுறித்து தமிழக அரசு தான் முடிவெடுக்கும். அரசுதான் அறிவிப்பு வெளியிடவும் வேண்டும்” என்றார்.
மேலும் பஞ்சாபில் பிரதமருக்குப் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது குறித்துப் பேசிய அவர், “இதற்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாப் அரசின் அலட்சியம்தான் காரணம். மிகவும் மோசமாக நடத்தி பிரதமரின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளனர்.
இதனைக் கண்டித்து இன்று (நேற்று) முதல் ஒரு வாரத்துக்குப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். மதுரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்துகொள்ள உள்ளேன். முன்னாள் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் நாளை (இன்று) சென்னையில் வாயில் கறுப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தவுள்ளோம். அதுபோன்று மனிதச் சங்கிலி போராட்டமும் நடத்தவுள்ளோம். பிரதமரின் உடல்நலன் நன்றாக இருக்க, மகளிர் அணி தலைமையில் மிருக்தஞ்சய ஜெபத்தை இன்றும் நாளையும் சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நடத்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டை எந்த காரணத்துக்காகவும் தள்ளி வைக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை மதுரையில் பஞ்சாப் பயணத்தில் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பஞ்சாப் மாநில அரசையும், காங்கிரஸையும் கண்டித்து அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
**-பிரியா**
�,