�அதே இடம்… அதைவிடக் கூட்டம் : மோடியின் பேச்சுக்கு மம்தா தந்த பதில் தெரியுமா?

politics

என்னதான் தமிழகத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துவிட்டது என சொல்லிக்கொண்டாலும், உண்மையான சூடு, மேற்குவங்கத்தில்தான்..!

மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் கடந்த திங்களன்று பிரதமர் மோடி பெரும் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். அப்போது, முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசாங்கத்தைக் கடுமையாக சாடினார். ”எல்லா இடத்திலும் கூட்டணி போட்டுக்கொண்டு பணம்பார்க்கிறார்கள்; ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கவேண்டும் என்றாலும் இவர்களின் அனுமதி இல்லாமல் நடக்காது எனும் நிலை வந்துவிட்டது. வங்காள கலாச்சாரத்தை சுத்தமாகக் கைவிட்டுவிட்டார்கள். தொழில்வளர்ச்சியை மாநில அரசாங்கம் தடுத்துநிறுத்திவிட்டது. ஏழை எளிய மக்களுக்கான மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் வரவிடாமல் செய்கிறார்..” என மம்தா தரப்பு மீது வரிசையாக புகார்களை அடுக்கினார், மோடி.

மூன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்துவிடும் முயற்சியில் மம்தா கட்சியும் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்துவிடும் முனைப்புடன் பாஜகவும் இப்போதைக்கு களத்தில் சரிக்கு சமமாக சவாலாக இருந்துவருகின்றன. கால் நூற்றாண்டு கால இடது முன்னணி ஆட்சியையே வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவரும் மம்தா என்றாலே, எப்போதும் அதிரடிதான்!

இரண்டு நாள்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பிரம்மாண்டக் கூட்டம் போட்ட ஹூக்ளி டன்லப் மைதானத்திலேயே, நேற்று மம்தாவும் மிக பிரம்மாண்டமான கூட்டத்தைத் திரட்டினார். மோடி பேசிய ஒவ்வொரு பேச்சுக்கும் பதிலடி கொடுத்துப் பேசினார், மம்தா.

தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழைப் புகழ்ந்து பேசுவதைப் போலவே, வங்காள மொழியையும் பண்பாட்டையும் பற்றி மோடி சிலாகித்துப்பேசியதை, போகிறபோக்கில் அடித்துவிடப் பார்த்தார், மம்தா. எதிரே டெலிபிராம்ப்டர் வைத்திருக்கிறார்கள்.. நவீன கண்ணாடி மூலம் அதில் உள்ளதை அப்படியே வாசிக்கிறார்.. எல்லாமே முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட வாசகங்கள்.. அவர் பேசுவதைப் பார்த்தால் வங்காளத்தில் பேசுவதுபோலத் தெரியும்.. இங்குமங்குமாக சில வங்காள மொழி வாசகங்களை சும்மா எடுத்துவிட்டால் போதுமென நினைக்கிறார்கள் என்றால், அது இங்கே எடுபடாது. இதயத்திலிருந்து வரும் உண்மையான அன்பே வங்காளிகளின் மனதை வெல்லக்கூடியது.” என்ற மம்தா, ஒரு படி மேலே போய், வங்காளத்தை வங்காளிதான் ஆளமுடியும்; ஒருபோதும் குஜராத்தி ஆளமுடியாது என்றும் குறிப்பிட்டார்.

தங்கள் ஆட்சியில் இன்னின்ன சாதனைகளைச் செய்தோம் என அவர் விரிவான பட்டியலிட்டார்.

மற்றபடி மம்தா பேசியதை விடாமல் கேட்டவர்களுக்கு, அவரின் உரை உண்மையில் இடிமுழக்கமாகத்தான் இருந்திருக்கும் என திரிணமூல் கட்சி பிரமுகர்கள் பெருமிதப்படுகிறார்கள். காரணம், மம்தாவின் இந்தப் பேச்சு பாஜக தரப்பை கடுமையாக கோபமூட்டிவிட்டது.

“பேயும் பிசாசும்தான் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள்.. இரண்டே பேர் மொத்த நாட்டையும் ஆட்டுவிக்கிறார்கள். பொய்…பொய்..மேலும் பொய்கள்.. எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக அவ்வளவையும் சொல்கிறார்கள். அவர்கள் உங்களின் முதுகெலும்பை உடைத்துவிடுவார்கள். வங்கத்துக்கு உள்ளேயேயும் வெளியேயும் இருக்கும் அனைத்தையும் வெளி ஆள்களை வைத்து நாசம்செய்வார்கள்.. அவர்களை நம்பி உங்கள் வாக்குகளை அளித்து ஒரு தவறை செய்யப்போகிறீர்களா?

ஒட்டுமொத்த தேசத்தையும் நீங்கள் விற்றுவிட்டீர்கள். எவ்வளவு துணிவிருக்கும்.. நீங்கள் எங்களைப் பார்த்து, பணம்பறிப்பவர்களெனச் சொல்கிறீர்கள். நீங்கள்தான் பெரும் கலவரக்காரர்கள்.. பெரிய சந்தர்ப்பவாதிகள்..

என்னையும் சேர்த்து எங்கள் கட்சியில் 20 லட்சம் ஊழியர்கள் இருக்கிறோம். எல்லாரையும் கைதுசெய்யுங்கள்.. ஏனென்றால், எங்களை உங்களால் அரசியல்ரீதியாக மோதமுடியாது. பழிவாங்குகிறீர்கள்.. எங்களைக் கைதுசெய்து சிறைகளை நிரப்புங்கள். இங்கே நடுவீர்களானால் நான் டெல்லியில் முளைப்போம். அடிபட்ட புலி ஒருபோதும் சும்மா இருந்துவிடாது, அது பயங்கரமானது.

இதே டன்லப் (மைதானம்) தொழிற்சாலையை எங்கள் அரசாங்கம் கையகப்படுத்த சட்டமன்றத்தில் 2016-ல் ஒரு மசோதாவை நிறைவேற்றினோம். மத்திய அரசாங்கம் இன்றுவரை அதற்கு அனுமதி தரவில்லை. ஐந்து ஆண்டுகளாக டன்லப் தொழிற்சாலை மூடிக்கிடக்கிறது. இங்கு நீங்கள் (மோடி) வந்து பேசுவதற்கு முன்பாவது இதற்கு பதில் சொல்லியிருக்கவேண்டும். நீங்கள் உங்கள் வேலையைச் செய்யவில்லை; நான் அப்படி அல்ல. டன்லப் ஆலை மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எங்கள் அரசாங்கம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கிக்கொண்டிருக்கிறது.

இங்கே வந்து அவர் (மோடி) நிறைய பேசிவிட்டுப் போயிருக்கிறார். பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லையாம்.. அப்படி வைத்துக்கொண்டாலும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் மத்தியபிரதேசத்திலும் உள்ள பெண்களின் பாதுகாப்பு என்ன நிலையில் இருக்கிறது? அந்தக் கட்சியில் யாரும் பெண்களைச் சேர்த்துவிடாதீர்கள். அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தாய்மார்களும் சகோதரிகளும் நிறைந்த மண் வங்கம் என்பதால் இங்கு அமைதி இருக்கிறது.

ஆட்டம் இங்கே தொடங்கிவிட்டது. அந்த (பிரதமர்) நாற்காலிக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன்.. இப்போது அவர் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார். வருங்காலத்தில் அங்கு அவர் இருக்கக்கூடாது.. அவர்களை நாம் திருத்தியாக வேண்டும். அவர்களை இங்கு தோற்கடித்துவிட்டால் நாட்டிலிருந்தே துடைத்து எறியப்படுவார்கள். அவர்களுடைய முடிவின் தொடக்கமாக இது இருக்கும். இந்த ஆட்டத்தில் நான் கோல்கீப்பராக இருக்கிறேன். என்னை மீறி பாஜக ஒரு கோலையும் அடித்துவிட முடியாது.” என்றெல்லாம் உணர்ச்சிவசமாகப் பேசிய மம்தாவுக்கு, ஆயிரக்கணக்கானவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்த காட்சிகளை ஊடகங்களில் பார்க்கமுடிந்தது.

பொதுவாக பெண்களின் பாதுகாப்பைப் பற்றிப் பேசிய மம்தா, அவருடைய அரசியல் வாரிசான அபிசேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா பானர்ஜியிடம், நிலக்கரிக் கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியதையும், சந்தடிசாக்கில் இதில் கோத்துவிட்டார்.

”எங்களை நீங்கள் நிலக்கரி திருடர் என்கிறீர்கள்.. எங்கள் வீட்டுக்குள் (அபிசேக்கின் வீட்டில் ருஜிராவிடம் சிபிஐ) நுழைகிறீர்கள்.. 22..23 வயது இளம்பெண்களை நிலக்கரித் திருடி எனச் சொல்கிறீர்கள்.. இதைச் சொல்லும் நீங்கள் துர்காபூரில் உள்ள (பெரும் நிலக்கரிக் கடத்தல் மாபியாவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும்) நட்சத்திர ஓட்டலில்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஏன் பாஜகவின் அகில இந்தியத் தலைவர்களும் மத்திய அமைச்சர்களுமே பல மாதங்களாக வந்து தங்கி, மேற்குவங்கத் தேர்தல் உத்திகளை வகுக்கிறீர்கள், திட்டங்களைத் தீட்டுகிறீர்கள். இதைச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? அந்தப் பணமெல்லாம் எங்கே போனது என்பதை அவர்(மோடி) சொல்லவேண்டும். நிலக்கரி நிறுவனமான கோல் இண்டியா, ரயில்வே, செயில், பிஎஸ்என்எல் எல்லாவற்றையும் ஏன் விற்கிறார்கள்? நாங்கள் இங்கு தொழிற்சாலைகளை வரவிடவில்லை என்கிறார்(மோடி). லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை அளிக்கும் சிங்குர் விவசாய தொழில்பூங்கா உள்பட பலவற்றைச் சொல்லமுடியும்(பட்டியலிட்டார்). ஆனால் நீங்கள் செய்வது என்ன.. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது தொடங்கிய திட்டத்தைக்கூட நீங்களே செய்ததாக இப்போது வந்து ரிப்பன் வெட்டுகிறீர்கள்..” என முழுக்க முழுக்க மோடியின் உரைக்கு பதிலுரையாகவே, மம்தாவின் டன்லப் மைதானப் பேச்சு அமைந்திருந்தது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *