சுஷாந்த் சிங்
‘கிரிக்கெட், ஆங்கிலேயர்களால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட இந்திய விளையாட்டு’ எனும் வாசகம், 1989இல் அதை உருவாக்கியவர் ஆஷிஸ் நந்தி என்பதை மறந்துபோகும் அளவுக்குப் பரவலாக அறியப்பட்டதாக இருக்கிறது. ‘தி டாவோ ஆப் இந்தியன் கிரிக்கெட்’ புத்தகத்தில், “இன்று இங்கிலாந்தைவிட இந்தியாவில் கிரிக்கெட் அதிக ஈடுபாட்டைக் கிளர்த்துகிறது” என எழுதியிருந்தார். இந்தியாவில் 1990களில் பொருளாதாரச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பாக இவ்வாறு எழுதினார். இந்தியாவில் கிரிக்கெட்டின் வர்த்தக, சமூகப் பரிமாணத்தை மாற்றிய 1996 உலகக் கோப்பை இன்னும் தொலைவில் இருந்த காலம்.
மைக் மார்குசே (Mike Marquesse) இயக்கி அண்மையில் வெளியான ‘வார் மைனஸ் தி ஷூட்டிங்’ படம், 1996இன் அதீத தேசியவாதம், அதீத வர்த்தகமயம் ஆகியவற்றின் விதைகளை நினைவூட்டியது. இந்திய கிரிக்கெட்டை சூழ்ந்திருக்கும் பெரிய காடாக இது வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இந்தியாவில் அரசியல், வாழ்க்கை பற்றிய விஷயங்களைக் குறிப்பிட கிரிக்கெட்டை மார்குசே பயன்படுத்தியிருக்கிறார். இதைத்தான் பெரும்பாலான விளையாட்டு எழுத்தாளர்கள் தவறவிடுகின்றனர். இந்த விளையாட்டு ஆடப்படும் பொருள், பின் தொடரப்படும் விதம், நிர்வகிக்கப்படும் முறையை விட்டுவிட்டு, அதன் ஆட்ட நுணுக்கங்களை அலசிக்கொண்டிருக்கின்றனர்.
இதைவிட மோசம், பத்திரிகையாளர்கள், இந்திய கிரிக்கெட் வீரர்களின் சமூக ஊடகப் பதிவுகளை, ஆடைகளை, சாதாரணக் கருத்துகளைக்கூடப் பரப்பி அவர்களைப் பிரபலமாக்கியிருக்கின்றனர். இந்த உள்ளடக்க உருவாக்குநர்களின் பயனாக இந்திய கிரிக்கெட் எப்போதும் செய்தியில் இருக்கிறது அல்லது இந்தியாவில் இந்திய கிரிக்கெட் தொடர்பான எல்லாமே செய்திதான். இது இந்திய கிரிக்கெட்டில் உள்ள பங்குதாரர்கள் அனைவருக்கும் ஒருவித ஆணவத்தையும், உரிமை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கேப்டனும், தற்போதைய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்கூலி 2009 கிரிக்கெட் கவுன்சில் நூற்றாண்டு விழாவில் கூறிய, “இந்தியா இப்போது உலக கிரிக்கெட்டின் மையமாகி இருக்கிறது” எனும் கருத்தை இவர்கள் வரித்துக்கொண்டுள்ளனர்.
**ஆட்டத்தின் மையமா, வணிகத்தின் மையமா?**
இந்தியா கடைசியாக டி20 உலகக் கோப்பையை 2007லும், ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை 2011லும் வென்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது. தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி சிறந்த அணி என்றாலும், 1980களில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி போலவோ அல்லது 1990களில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி போலவோ சர்வ வல்லமை பெற்றது அல்ல. இந்திய ஆதிக்கம், டிவி உரிமைகள் மூலம் நிதி ஆதாரத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது. இந்தியா உலக கிரிக்கெட் வர்த்தகத்தின் மையமாக இருக்கிறது என்று கங்கூலி சொல்லியிருந்தால் துல்லியமாக இருந்திருக்கும்.
தற்போதைய மதிப்பீட்டின்படி இந்தியா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 70 சதவிகித வருவாய்க்குக் காரணமாக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு கிரிக்கெட் வாரியம் தனக்குத் தேவையானதை சாதித்துக்கொள்கிறது. கிரிக்கெட் விளையாட்டின் நலம் இதனால் பாதிக்கப்படுவது பற்றி எல்லாம் கவலைகொள்வதில்லை. 2014இல் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் சேர்ந்துகொண்டு தங்கள் பங்குக்கு ஏற்ற வருவாய் விகிதத்தைப் பெற்றது. நல்லவேளையாக 2017இல் இந்த முறை ரத்து செய்யப்பட்டது.
கிரிக்கெட் வாரியம் உலகின் செல்வச் செழிப்பான விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக இருக்கிறது. 2021 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் கோவிட்-19 தாக்கத்துக்குள்ளானபோது, கிரிக்கெட் வாரியத்தின் நிகர மதிப்பு ரூ.1,594.67 கோடி வளர்ந்தது. எனினும் உள்நாட்டில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்த நிதியைப் பயன்படுத்துவதில் கிரிக்கெட் வாரியம் கஞ்சத்தனமாக நடந்துகொள்கிறது.
**அடங்க மறுக்கும் வாரியம்**
இந்திய கிரிக்கெட்டில் உள்நாட்டு வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக அல்லாமல் எப்படி மோசமாக நடத்தப்படுகின்றனர் என ஷார்தா உக்ரா விரிவாக எழுதியுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டில் வாரியத்தின் செயல்பாடு இன்னும் மோசம். 2020 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான பரிசுத் தொகையை வாரியம், பெண்கள் அணியினரிடம் இன்னமும் வழங்கவில்லை என பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்ட பிறகே வாரியம் வழங்கியது.
“நீங்கள் சீர்திருத்தப்பட மறுக்கிறீர்களா?” என்று 2016 வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்றம் கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டது. உச்ச நீதிமன்றம் கடுமையான விதிகளை உருவாக்கினாலும், கிரிக்கெட் வாரியம் அவற்றைக் கண்டுகொள்ளவே இல்லை. ரோஹித் ஷர்மா இடுப்பு உயரத்துக்கு வீசப்படும் ஃபுல் டாஸ் பந்துகளை அலட்சியமாக எதிர்கொள்வதுபோலவே வாரியம் இவற்றை எதிர்கொண்டது.
சொல்லப்போனால் இவை எல்லாம், நீதிமன்ற வழக்குகளில் நிலுவையில் இருப்பவை. கிரிக்கெட் வாரியம் மற்றும் துணை அமைப்புகள், கிரிக்கெட் வாரிய சாசன விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு டஜனுக்கு மேல் மனு தாக்கல் செய்து, அவை ஏற்கப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமானது, மூன்று தலைமை நிர்வாகிகளின் பதவிக்காலம் தொடர்பானது. இவர்கள் தொடர அனுமதிக்க வேண்டும் என்பது கோரிக்கை.
கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்கூலி, செயலாளர் ஜெய் ஷா, பொருளாளர் அருண் தூமல் ஆகியோர் இந்த நிர்வாகிகள். இவர்கள், கிரிக்கெட் வாரியம் அல்லது மாநில சங்கங்களில் ஆறு ஆண்டுக் காலம் பதவி வகித்த பிறகு மூன்று ஆண்டுகள் எந்த பதவியிலும் இல்லாமல் இருக்க வேண்டும். 2020 ஜூனில் இவர்கள் பதவிக் காலம் முடிந்த நிலையில், அதிகாரத்தில் அவர்கள் தொடர்கின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நிலுவையில் உள்ளது.
முன்னாள் கேப்டன் கங்கூலியின் ஒரே குறிக்கோள் எப்படியாவது பதவியில் இருப்பது என்பது ஷா குழுவினருக்கு ஏற்றதாக இருக்கிறது. வாரியத்தில் உண்மையாக அதிகாரம் செலுத்துபவர்களுக்கான கிரிக்கெட் முகத்தை கங்கூலி வழங்குகிறார். மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் சகோதரர் தூமல் செயலாளர் என்றாலும், ஜெய் ஷா செயலாளர்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் நாட்டை ஆளும் தலைமைக்குமான நேரடி தொடர்பாக இருக்கிறார். ஷாதான், குஜராத்தில் சீரமைக்கப்பட்ட பட்டேல் மைதானத்துக்கு நரேந்திர மோடியின் பெயரை வைத்தவர்.
இன்று கிரிக்கெட் வாரியம் ஆட்சியில் இருக்கும் அரசின் வழியில் நடந்துகொள்கிறது. மாநில அளவிலான அரசியல்வாதிகள் கிரிக்கெட் வாரியச் செயல்பாடுகளில் ஈடுபடுவது வழக்கம் என்றாலும், நாட்டின் அரசியல் தலைமையில் இருப்பவர்கள் இதற்கு முன் இத்தனை நெருக்கமாக கிரிக்கெட் வாரியச் செயல்பாட்டில் ஆர்வம் காட்டியதில்லை.
**அரசியலும் கிரிக்கெட்டும்**
கிரிக்கெட் வாரிய அதிகாரத்துக்கும் அதை ஜெய் ஷா கையாண்டுவரும் விதத்துக்கும் இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். டோக்கியோ ஒலிம்பிக்குக்கு இந்திய அணி செல்லும் முன் வாரியம், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.10 கோடி அளிக்கத் தீர்மானித்தது. கிரிக்கெட் வாரிய விதிகள் வரையறுப்பதுபோல, இந்தப் பணம் கிரிக்கெட் வளர்ச்சிக்காகச் செலவிடப்படவில்லை.
இதன் பிறகு நவம்பர் மாதம், கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் மூலம் வருவாயைப் பெற்றாலும், அதன் நோக்கம் கிரிக்கெட் வளர்ச்சி என்பதால் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் எனும் கோரிக்கையை வருமான வரி தீர்ப்பாயம், ஏற்றது. இந்தச் சேவை அமைப்பு, 2014க்குப் பிறகு பல்வேறு வழக்கு விவகாரங்களுக்கு ரூ.830.32 கோடி ஒதுக்கியுள்ளது.
முன்னணி அரசியல் தலைவர்கள் தவிர, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களும் கிரிக்கெட்டில் தொடர்பு கொண்டுள்ளனர். முகேஷ் அம்பானி குடும்பம் மும்பை ஐபிஎல் அணியின் உரிமை கொண்டுள்ளது. அதானி குழுவும் ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் காட்டுகிறது.
இந்தியா எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை அறிய கிரிக்கெட் வாரியச் செயல்பாட்டைப் பார்த்தாலே போதுமானது. அது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அலட்சியம் செய்து, விதிமுறைகளை எளிதாக மீறிப் பண அதிகாரத்தைத் தன் இஷ்டம்போலக் கட்டுப்படுத்தி வருகிறது.
அரசு போலவே கிரிக்கெட் வாரியமும் கிரிக்கெட்டர்கள் மீதான தாக்குதல் குறித்து முழுமையாக மவுனம் சாதிக்கிறது. முகமது ஷமி அல்லது வாசிம் ஹாபர் சம்பவங்களில் இதுதான் நடந்தது.
வெளிநாட்டு விவகாரத்தில் மட்டும்தான் இந்த ஒப்பீடு செல்லுபடியாகவில்லை. கிரிக்கெட் வாரியம் எல்லா விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதை இந்திய அரசால் செய்ய முடியவில்லை. சீனாவை விட்டுவிடுங்கள், சின்ன அண்டை நாடுகூட இந்தியா சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்கத் தயாராக இல்லை. அதேபோல மோடி அரசை வெளிநாட்டு ஊடகங்கள் கடுமையாக விமர்சிக்கின்றன. பல வெளிநாட்டு வர்ணனையாளர்களோ இந்திய கிரிக்கெட் வாரிய ஆதரவைச் சார்ந்துள்ளனர். நிச்சயம் அரசு கிரிக்கெட் வாரியத்தைப் பார்த்து இந்த விஷயத்தில் பொறாமை கொள்ளும்.
*
நன்றி: **[theindiaforum.in/](https://www.theindiaforum.in/article/beyond-bcci?utm_source=website&utm_medium=organic&utm_campaign=category&utm_content=Society)**
கட்டுரையாளர் **சுஷாந்த் சிங்**, ஆய்வாளர், யேல் பல்கலை வருகைதரு பேராசிரியர்.
தமிழில்: **சைபர் சிம்மன்**
.
�,”