அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினத்தை ஒட்டி நேற்று ஏப்ரல் 14ஆம் தேதி ப்ளூ கிராஸ் டிஜிடல் பவுண்டேஷன் நிறுவனம் ‘அம்பேத்கர் அண்ட் மோடி சீர்திருத்தவாதியின் சிந்தனைகளும் செயல்வீரரின் நடைமுறைப்படுத்தலும்’ என்ற தலைப்பில் புத்தகம் அமேசானில் வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகத்தின் முறையான வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெறும் என்று பதிப்பகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் தமிழ்நாட்டில் பரவலாக விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அவதற்க்குக் காரணம் இந்தப் புத்தகத்திற்கான முன்னுரை எழுதி இருப்பவர் இசைஞானி இளையராஜா.
மோடியைப் புகழ்ந்து இளையராஜா அந்த புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருப்பதை ஆதரித்தும் எதிர்த்தும் சமூக தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்கள் முழுதும் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷ்நாராயணன் வரைந்த தமிழணங்கு என்கிற தமிழ்த்தாய் ஓவியத்தை வெளியிட்டிருந்தது பேசுபொருள் ஆனது.
இந்த நிலையில் நேற்று முதல் இளையராஜா மோடியை புகழ்ந்து அவரை பற்றிய புத்தகத்தில் முன்னுரை எழுதி இருப்பது பேசுபொருள் ஆகி வருகிறது.
இளையராஜாவின் இசைக்கு ஜாதி மதம் இனம் மொழி கடந்து பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் மோடியை அம்பேத்கரோடு ஒப்பிட்டு இளையராஜா புகழ்ந்திருப்பதை அவரது இசை ரசிகர்கள் கணிசமானோர் விரும்பவில்லை என்பதை அவர்களது பதிவுகள் காட்டுகின்றன.
2018 ஆம் ஆண்டு இளையராஜாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
**வேந்தன்**