நீட் விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றுவதற்கான சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. தொடக்க உரை ஆற்றிய சபாநாயகர் அப்பாவு,” அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி .நீட் விலக்கு கோரும் மசோதாவை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அரசியல் சாசனப் பிரிவு 200ன்கீழான அதிகாரத்தின் கீழ் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
உயர்மட்டக் குழுவின் அறிக்கை ஏற்புடையதாக இல்லை என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். காமாலைக் கண்ணால் பார்ப்பவர்கள் போல் அந்த அறிக்கை ஒருதலைப்பட்சமாக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு மட்டுமே தமிழகம் முக்கியத்துவம் அளிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை” என்று கூறி ஆளுநர் அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கத்தை படித்து விளக்கமளித்தார்.
“நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஆனதால் அதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. இயன்ற அளவில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் 142 நாட்கள் கழித்து மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா? இதுசரிதானா” என்று சபாநாயகர் கேள்வி எழுப்பினார்.
சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். எனது பணி, கடமையில் இருந்து கடுகு அளவும் விலக மாட்டேன் ” என்று கூறிய அவர்,”இன்று சட்டசபையில் எம்எல்ஏக்கள் ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்காமல் மாண்புடன் பேச வேண்டும், நீட் விலக்கு மசோதா பற்றி மட்டுமே பேச வேண்டும். சட்ட ரீதியான விஷயங்களை மட்டுமே மாண்புடன் பேச வேண்டும்” என்றுக் கூறினார்.
இதையடுத்து, சபாநாயகர் விவாதத்தைத் தொடங்கிவைக்க, நீட் தேர்வு விலக்கு மசோதாவை சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பல் மற்றும் மருத்துவ கல்வி உட்பட அனைத்து தொழிற்கல்வி சேர்க்கையிலும் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்காக,பொதுமக்களின் கருத்து மற்றும் ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாணவர்களால் இதற்கென தனிப்பயிற்சி பெற முடியாத சூழல் மற்றும் +2 தேர்வுடன் போட்டி தேர்வுகளும் நடைமுறையில் இருக்கும் போது ஏற்படும் மன அழுத்தம் போன்ற பல்வேறு கோணங்களில் முனைவர் எம். அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை பெற்ற பின், இதற்கென ஒரு சட்ட முன்வடிவு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு மாண்புமிகு குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று, சட்டம் இயற்றப்பட்டது என்பதை அனைவரும் அறிந்ததே.
நீட் தேர்வை அறிமுக காலத்திலிருந்தே தமிழ்நாடு அரசு எதிர்த்து வருகிறது. ஆனால், மக்களின் உணர்வை மீறியும் 2017க்குப் பின் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர், கடந்த 13.09.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது. தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வினை பிரதிபலிக்கும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். பின்னர் இருமுறை முதல்வர், ஆளுநரை நேரில் சந்தித்து மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு வலியுறுத்தினார்.
ஆனால், 142 நாட்களுக்குப் பின்னர் ஒரு கடிதத்தை ஆளுநர் அனுப்பியுள்ளார். சட்ட மசோதாவை ஆளுநர் தன்னிச்சையாக திருப்பியனுப்பியது சரியான முடிவு அல்ல. தமிழக அரசின் சட்ட மசோதா, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்ட மசோதா என்று ஆளுநர் கூறியுள்ளார்.
ஆனால், ஆளுநர் கூறுவது போல் இது வெறும் அறிக்கையின் அடிப்படையிலானது அல்ல. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வு தொடர்பான உண்மை நிலவரங்களை அறிந்து விரிவாக ஆய்வு செய்து பொதுமக்கள் கருத்துகளைக் கேட்டு ஏழு பரிந்துரைகளை அளித்தது. அதில் உள்ள மூன்றாவது பரிந்துரையை ஆராய்ந்து, அதில் சட்ட வல்லுநர்களின் கருத்துகளை முறையாகக் கேட்டு மசோதாவை நிறைவேற்றியுள்ளோம்.
மேலும், ஆளுநர் குறிப்பிட்டுள்ளதுபோல் நீட் விலக்கு மசோதாவில் இடம்பெற்றுள்ள நீட் தேர்வு எதிர்ப்பு கருத்துகள் வெறும் ஊகங்கள் அல்ல. மேம்போக்காக கூறப்பட்டுள்ள ஆளுநரின் கருத்து தமிழக அரசு அமைத்த உயர்மட்டக் குழுவை அவமதிக்கிறது.
நீட் தேர்வு உண்மையில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே எளிதானதாக உள்ளது. மற்றபடி கிராமப்புற ஏழை, பட்டியலின மாணவர்களுக்கு இது எட்டாக்கனியாக உள்ளது. மேலும், புதிதாக பனிரெண்டாவது வகுப்பு தேர்வை முடித்து நீட் தேர்வை எழுதுபவர்கள் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று பன்முறை எழுத வசதியுள்ள மாணவர்களுக்கு சாதகமாக நீட் தேர்வு உள்ளது.
நீட் தேர்வால், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் 1 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது. இதனால்தான் நீட் தேர்வை எதிர்த்து அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது. நீட் தேர்வு தனிப் பயிற்சியை ஊக்குவிக்கிறது. இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பயிற்சி தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசின் உயர்மட்டக் குழுவின் அம்சங்களை குறைகளாக சுட்டிக்காட்டுவது அரசியல் அமைப்பின்படி சரியானது அல்ல .
நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை ஒரு தலைப்பட்சமானது என்று ஆளுநர் கூறியுள்ளார். உண்மையில் அந்தக் குழு பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சிஎம்சி வேலூர் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீட் தேர்வை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என ஆளுநர் தனது கடித்தில் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பில் மாநில அரசுக்கும் சட்டம் இயற்றுவதற்கான அனுமதி உள்ளது. எந்த ஒரு சட்டமும் ஏதாவது ஒரு மத்திய அரசின் சட்டத்திற்கு மாறாக இருந்தால், அதற்கு அரசியல் சட்ட அமைப்பு 754/2-ன் கீழ் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு.
சட்டமன்றத்தில் சட்டமே இயற்றக்கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பை கொண்டு முடிவு செய்வது அரசியல் சட்ட அமைப்பையே கேள்விக்குறியதாக ஆக்கிவிடும். தமிழக அரசால் கொள்கை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி திருப்பியனுப்பியுள்ளது சரியான நடவடிக்கை அல்ல. நீட் விலக்கு மசோதா குறித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மொத்த மதிப்பீடும் தவறானது. எனவே, நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற இந்தச் சட்டப்பேரவை முடிவு செய்துள்ளது” என்று கூறினார்.
இதையடுத்து, மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து புரட்சி பாரத கட்சியின் ஜெகன்மூர்த்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன், காங்கிரஸின் செல்வப்பெருந்தகை, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, மதிமுகவின் சதன் திருமலைக்குமார்,விசிகவின் பாலாஜி இந்திய கம்யூனிஸ்ட் ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாலி ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர்.
நீட் எதிர்ப்பு கொள்கையில் என்றும் அதிமுக உறுதியாக இருக்கிறது என்று அதிமுக விஜயபாஸ்கரும் ஆதரவு அளித்து பேசினார்.
**-வினிதா**