கோவையின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஏற்ப அரசு செயல்படவில்லை என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 1) செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “சமீபத்தில் வெளியிடப்பட்ட குடும்ப சுகாதாரத் துறை அறிக்கையில், வளர்ந்த நாடுகளைப் போன்று இந்தியாவிலும் பெண்களின் பாலின விகிதம் அதிகரித்துள்ளது. கிட்டதட்ட 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முதன்முறையாக 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்ற அளவில் இந்தியாவில் ஆண்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பெண்கள் அதிகமாக இருக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இது நல்ல ஆரோக்கியமான விஷயம். ஏனெனில், பெண் குழந்தை பிறப்புக்குப் பல்வேறு சமூக சூழ்நிலைகள் தடையாக இருந்தது. குறிப்பாக பீகாரில் பெண் குழந்தை விகிதம் குறைவு. அங்குதான் பிரதமர் “பெண்களை பாதுகாப்போம், படிக்க வைப்போம்” என்ற திட்டத்தைத் தொடங்கினார். அந்தத் திட்டத்தின் மூலம் பெரியளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு பழைய இந்திய தண்டனை சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, புதிய சட்டத்தின்படி குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கும்வகையில் வழிவகையை ஏற்படுத்தி கொடுத்தது இந்த ஒன்றிய அரசாங்கம்தான். பெண் குழந்தைகள் பாதுகாப்பில் இந்த அரசாங்கம் எந்த சமரசமும் செய்துக் கொள்ள போவதில்லை” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை பராமரிப்பு பணிகள், புதிதாக சாலை போடுதல், தெரு விளக்கு, குப்பை எடுக்கக் கூடிய பிரச்சினைகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மாநில முதல்வரே கோவைக்கு வந்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், கோவையில் ஒருசில இடங்களில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை, வாரத்திற்கு ஒருமுறை என்ற அளவில்தான் குப்பைகளை அகற்றுகின்றனர். அதனால் எங்கு பார்த்தாலும் குப்பையாக இருக்கிறது. முந்தைய அரசாங்கத்தில் சாலை போடுவதற்காக ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதன்படி சாலை போடுவதற்கான வேலைகளை ஆரம்பிக்கும் வேளையில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதற்கு புதிதாக ஒப்பந்தங்கள் போடுகிறோம் என்று கடந்த மூன்று மாதங்களாக சொல்லி கொண்டிருக்கின்றனர். எந்த இடத்திலும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. எப்போது கேட்டாலும், புதிய ஒப்பந்தம், புதிய ஒப்பந்தம் என்ற பதில்தான் வருகிறது.
மழைக்காலம் வருகிறது. மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும். புதிதாக சாலை அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் தொடர்ந்து அவர்களிடம் தெரிவித்தேன். ஆனால், எந்தப் பணியும் நடைபெறவில்லை. ஆங்காங்கே சில தற்காலிக பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. ஆனால், கோவையின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஏற்ப, தேவைகளுக்கு ஏற்ப அரசு நிர்வாகம் செயல்படவில்லை. அதனால் ஒப்பந்தங்களை காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல், ஒப்பந்தங்களை நிறைவேற்றி மக்களுக்கான பணிகளில் வேகம் காட்ட வேண்டும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,