திமுகவிலிருந்து தன்னை நீக்கியது ஜனநாயகப் படுகொலை என கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் கடந்த 4ஆம் தேதி சந்தித்தார். ஆனால், தான் பாஜகவில் இணையவில்லை எனத் தெரிவித்தார். இதன் எதிரொலியாக கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட செல்வம், நேற்று நிரந்தரமாகவும் நீக்கப்பட்டார். அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க முடியாது என்ற நிலையில், பாஜகவின் குரலாக கு.க.செல்வம் செயல்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 14) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய செல்வம், “திமுகவிலிருந்து என்னை நீக்கியது நியாயமல்ல. விசாரணை மேற்கொள்ளாமல் நீக்கியது சட்டத்திற்கு புறம்பானது. ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக இரண்டு முறை தோல்வியடைந்துள்ளது. 2016 தேர்தலில் நின்று நான் வெற்றிபெற்றுள்ளேன். பொதுமக்கள் என்னை ஆதரித்ததால்தான் நான் வெற்றிபெற்றேன். மீண்டும் போட்டியிட்டால் வெற்றிபெறும் வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தார்.
தன்னை கட்சியிலிருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று தெரிவித்த அவர், “விளக்கம் கேட்டு எனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு மறுநாளே பதில் அளித்துவிட்டேன். எனது விளக்கத்திற்கு பதில் கடிதம் கூட தரவில்லை. நேரில் விசாரணைக்கு வர சம்மதம் தெரிவித்த நிலையிலும், விசாரணைக்கு அழைக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார்.
மூத்த நிர்வாகிகள் பலரும் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள், அவர்களும் கட்சியை விட்டு விரைவில் வெளியேறுவார்கள் என்றவர், திமுகவில் தன்னுடைய பிரச்சினைக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.
**எழில்**�,