oடெல்டா ஆய்வு: மக்களோடு மக்களாய் முதல்வர்!

Published On:

| By Balaji

கனமழை காரணமாகச் சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தில் காவேரி டெல்டாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், இன்று (நவம்பர் 13) காவேரி டெல்டா பகுதிகளுக்குப் பயணம் செய்தார்.

நேற்று நவம்பர் 12ஆம் தேதி, காலையில் பள்ளிக்கரணை நாராயணபுரம், வண்டலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு மாலை 5.45 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி ஹோட்டல் அக்கார்டுக்கு இரவு வந்தார், அவருடன் அமைச்சர் நேரு மற்றும் டிஆர் பாலு வந்தனர். அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கணேசன், மஸ்தான் போன்ற அமைச்சர்கள் எம்.எல்.ஏ,க்கள் முதல்வரை சந்தித்துவிட்டு மழை பாதிப்புகளை இரவே விளக்கினார்கள்.

இன்று காலை 7.30 மணிக்கு ஹோட்டலிருந்து கடலூர் நோக்கிப் புறப்பட்டார் முதல்வர், கடலூர் எல்லையான ரெட்டிச்சாவடியில் காலை 8 மணிக்கு முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் பயணித்த வாகனத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மக்களவை திமுக தலைவர் டிஆர் பாலு ஆகியோர் உடன் பயணித்தார்கள்.

முதல்வர் கான்வாய் (பாதுகாப்பு வாகனங்கள்) செல்லும்போதும் எதிர்த்திசையிலிருந்தும் வாகனங்கள் தடையில்லாமல் போய்க்கொண்டிருந்தது. பின்னால் வரும் வாகனங்களும் நிற்காமல் போனது, அதிகமான ட்ராபிக் இல்லை, முதல்வர் வருகிறார் என்று ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கும் முன்னாடியே வாகனத்தை நிறுத்தவும் இல்லை. அதேபோல் குறிஞ்சிப்பாடி தொகுதியில் மாருதி நகரில் இருளர்கள் வசிக்கும் இடத்திற்கு முதல்வர் வருவதற்குக் கொஞ்சம் நேரத்திற்கு முன்பு சீருடையிலிருந்த ஆண் மற்றும் பெண் போலீஸார் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அதன் பிறகு ஆடூர் அகரம் வழியாகச் சிதம்பரம் செல்லும்போது ஆடூரில் நெல் பயிர்களைப் பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளை சந்தித்தார். முதல்வரை உரசும் நெருக்கத்தில் நின்ற விவசாயிகள், ‘ஐயா….எல்லாம் போயிருச்சுங்க. நீங்கதான் நல்ல முடிவு எடுக்கணும். இப்பதான் உரமெல்லாம் போட்டோம். ஆனா மொத்த பயிரும் மூழ்கிடுச்சு’ என்று குரலெழுப்பினார்கள். அவர்களை பாதுகாப்பு போலீசார் கட்டுப்படுத்த முயல, ‘விடுங்க விடுங்க பாதிக்கப்பட்டவங்க குறைகளை சொல்லட்டும்’ என்று அனுமதித்தார் முதல்வர் ஸ்டாலின்.

10.20 மணிக்குச் சிதம்பரம் தனியார் ஹோட்டலில் காலை உணவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, அங்கே போலீஸார் அணி வகுப்பு மரியாதை செய்தனர். முதல்வர் ஹோட்டலுக்குள் நுழையும்போதே விவசாய சங்கத்தினர் முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தனர். அவர்களிடம் நின்று சில நிமிடங்கள் பேசினார் முதல்வர், ‘பயிர் காப்பீடு செய்யுறதுக்கான சர்வர் சரியா வேலை செய்யலங்க. அதனால தாமதமாவுது. 15 ஆம் தேதி வரைக்கும்தான்னு சொல்றாங்க. நீங்க அதை நீட்டிச்சுத் தரணும்’ என்று கோரிக்கை வைத்தனர். ‘நிச்சயமா பண்றேன். இதப் பத்தி டெல்லியிலயும் சொல்லியிருக்கோம்’ என்று பதிலளித்தார் முதல்வர்.

நேற்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழுவினர் பெரியசாமி, தங்கம் தென்னரசு, ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்கள். காலையில் முதல்வர் தனியார் ஹோட்டலில் சாப்பிடும்போது, அமைச்சர் ஐ.பெரியசாமி, மெய்யநாதன் அன்பில் மகேஷ் மூவரும் முதல்வரைச் சந்தித்து முதல் கட்ட ரிப்போர்ட்டைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு 10.50க்கு சிதம்பரத்திலிருந்து புறப்பட்டார் முதல்வர்.

முதல்வர் ஆய்வில் போலீஸார் கெடுபிடி குறைந்திருப்பது பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோதுதான் காரணம் தெரிந்தது.

“முதல்வர், அமைச்சர்கள், அவர்களுக்கான எஸ்கார்டு வாகனங்கள், கட்சிகாரர்களின் வாகனங்கள் என அணி வகுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்றால் நன்றாக இருக்காது என்று முதல்வர் முடிவெடுத்துவிட்டார். அதனால் தனது பயணத்தில் போலீஸாரின் கெடுபிடி கொஞ்சமும் இருக்கக் கூடாது என்று நேற்றே காவல்துறை தலைமைக்கு உத்தரவிட்டுவிட்டார் முதல்வர். அதையடுத்து உளவுத்துறை அதிகாரி உத்தரவால் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் இன்று காலையில் ஓப்பன் மைக்கில், ‘முதல்வர் கான்வாய் போகும்போது எதிர்வரும் வாகனங்களை நிறுத்தவேண்டாம், வரவேற்பு கொடுக்க வேண்டாம் பூங்கொத்துகள் கொடுக்கக்கூடாது, மக்கள் நிற்கும் இடத்தில் அதிகளவில் போலீஸ் வேண்டாம். குறிப்பாகப் பார்வையிடும் பகுதியில் சீருடை போலீஸ் வேண்டாம். மஃப்டி போலீஸ் போதும். முதல்வர் பார்த்தால் வருத்தப்படுவார் நான் சொன்னதை மீறிச் செயல்பட்டால் நடவடிக்கை எடுப்பேன்’ என்று சொல்லிவிட்டார். இதனால்தான் முதல்வரின் வருகையில் போலீஸாரின் பெரிய கெடுபிடிகள் இல்லாமல் முதல்வரிடம் விவசாயிகளும் மக்களும் நேரடியாகவும் நெருக்கமாகவும் உரையாட முடிந்தது.

டெல்டா மாவட்டங்களில் ஆய்வை முடித்துவிட்டு இன்று மாலை மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது அவர், “கடந்த ஒரு வாரமாக நானும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், களப்பணியாளர்களுடன் மழை வெள்ள சேதம் பற்றி ஆய்வு செய்து வருகிறேன். இன்று காலை முதல் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன். விவசாயிகளின் உணர்வுகளை நேரடியாக கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

நேற்று ஐ பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு ஆரம்பகட்ட ஆய்வு குழு நடத்தியது. அவர்கள் நேற்றைய தினம் பயணம் மேற்கொண்டு, அதுபற்றி இன்று காலை என்னை சந்தித்து தெரிவித்தார்கள்.

டெல்டாவில் இருக்கும் 17லட்சத்து 6 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் 68ஆயிரத்து 652 ஹெக்டேர் நீரில் மூழ்கியுள்ளது. தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கிராம வாரியாக முழுமையான கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளேன். அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்,

ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அரசு குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்களை 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரியது. அதனால்தான் மேட்டூர் அணை திறந்ததும் காவிரி நீர் கடை மடை வரை சென்றடைந்தது. தற்போதைய மழை வடியவும் இது காரணமாக அமைந்தது. இதுவரை எந்த ஆண்டிலும் இல்லாமல் குறுவை சாகுபடி இதுவரை 4.9 லட்சம் ஹெக்டேர் நடைபெற்று நெல் கொள்முதல் நடைபெற்றது.

வடகிழக்குப் பருவ மழை காலத்தில் நவம்பர் 6 முதல் 11 தேதிகளில் மிக அதிக மழை பெய்திருக்கிறது. இதை எதிர்பார்த்து கடந்த 4 மாதங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். டெல்டா மாவட்டங்களிலும் செய்துள்ளோம். அதனால்தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கமிஷன் அடித்தார்களே தவிர, வேலை எதையும் செய்யவில்லை. அதுபற்றி விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படும்.

மழை வெள்ள பாதிப்புகள் பற்றி உடனடியாக மதிப்பீடு செய்யப்பட்டு, ஒன்றிய அரசிடமும் பேசி நிவாரணத் தொகை அறிவிக்கப்படும். இதில் அரசியல் செய்பவர்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது சொன்னமாதிரி வாக்களித்தவர்களோடு, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்தே உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

**-வணங்காமுடி, வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share