தென் மண்டல கவுன்சில் கூட்டம் எனப்படும் தென்னிந்திய மாநில முதல்வர்களின் கூட்டம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று (நவம்பர் 14) திருப்பதியில் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் கலந்துகொள்ளவில்லை. .
சவுத் சோனல் கவுன்சில் எனப்படும் தென் மண்டல வளர்ச்சி கவுன்சிலின் 29 ஆவது கூட்டம் இன்று நவம்பர் 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பதியில் நடைபெற இருக்கிறது. மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டத்துக்காக நேற்றே ஆந்திரா வந்துவிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றார். பின் இருவரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்கள். இன்று ( நவம்பர் 14) காலை நெல்லூரில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அமித் ஷா பகல் திருப்பதி திரும்புகிறார்..
ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி,லட்சத்தீவு, அந்தமான் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தென் மண்டல கவுன்சிலில் உறுப்பினர்கள் பங்கேற்கும் இந்த 29 ஆவது கூட்டத்துக்கு உள்துறை அமைச்சர் தலைமை தாங்கினாலும் துணைத் தலைவராக இருப்பவர் கூட்டத்தை நடத்தும் ஜெகன் மோகன் ரெட்டி.
பிற்பகல் 3 மணிக்கு தென்மண்டல கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டம் நடைபெறும் மாநிலம் என்ற வகையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவின் முதல்வர் பசவராஜ் பொம்மையும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அமித் ஷா தலைமையில் நடைபெறும் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிகிறது. தெலுங்கானா சார்பில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் முகமது மகமூத் அலி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த மாநாட்டில் பங்குபெறுவது பற்றியும் எந்த அறிவிப்பும் இல்லை. கேரளாவில் புயல் மழை பாதிப்பு இருப்பதால் அவர் பங்குபெற வாய்ப்பு குறைவு என்று தெரிகிறது.
அதேபோல தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) நடைபெறும் தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்குபெறவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பதி செல்லும் பயணத்திட்டம் இன்று காலை வரை இல்லை என்று முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று (நவம்பர் 14) காலை தலைமைச் செயலகத்தின் செய்தி வெளியீட்டுப் பிரிவின் துணை இயக்குனர் வெளியிட்ட செய்தியில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி, திருவிகநகர் சட்டமன்றத் தொகுதி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குகிறார். கொரோனா தடுப்பூசி மற்றும் வெள்ள சிறப்பு மருத்துவ முகாம்களைத் தொடங்கி வைக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சிகள் முடியவே பகல் பொழுதாகிவிடும். அதையடுத்து அவர் விமானத்தில் திருப்பதிக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஆனாலும் இன்று காலை வரை திருப்பதி பயணத் திட்டம் முதல்வருக்கு இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் தென் மாநில முதல்வர்கள், அவர்களுடன் இரு அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கலந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத் தக்கது.அந்த வகையில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்கிறார்கள்.
**-வேந்தன்**
[ஸ்டாலினை அழைக்கும் அமித் ஷா](https://minnambalam.com/politics/2021/11/06/29/amitsha-invite-mkstalin-meeting)
�,