புத்தகக் காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’

politics

சென்னையில் 45ஆவது புத்தகக் காட்சியை நேற்று (பிப்ரவரி 16) மாலை தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தப் புத்தகக் காட்சியில் நான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் இம்மாத இறுதியில் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடைபெறும். சென்னையில் இந்த வருடத் தொடக்கத்தில் நடைபெற இருந்த புத்தகக் காட்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தகக் காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
தமிழக அரசின் அனுமதியைத் தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று புத்தகக் காட்சி தொடங்கியது. இந்த 45ஆவது புத்தகக் காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆறு எழுத்தாளர்களுக்கு கருணாநிதி பொற்கிழி விருதை வழங்கி பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா தொற்று பரவலால் புத்தகக் காட்சி தேதியை தள்ளிவைத்தது முதலில் சிரமமாக இருந்தது. மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும். சென்னை புத்தகக் காட்சிக்கு வழக்கமாக வழங்கப்படும் ரூ.75 லட்சத்துடன் கூடுதலாக ரூ.50 லட்சம் என மொத்தமாக ரூ.1.25 கோடி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
செம்மொழி தமிழின் சிறப்புகளை உலகமெங்கும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக ஆக்கப்பட்டுள்ளது. ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்க தொடங்கி உள்ளது. அறிவுக் கோயில்களைக் கட்டுவதில் ஆர்வமாக உள்ள அரசுதான் இந்த அரசு. மதுரையில் கருணாநிதி பெயரில் பிரமாண்டமான நூலகம் அமைக்கப்படுகிறது” என்று பேசியவர்…
தொடர்ந்து, “இதுவரை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய 1.50 லட்சம் புத்தகங்களை, இலங்கை யாழ்ப்பாணம் நூலகம் தொடங்கி பல ஊர்களில் இயங்கும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளேன். நான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் இம்மாத இறுதியில் வெளியாகும். என்னுடைய 23 ஆண்டுக் கால வாழ்க்கை பயணத்தை அதில் நான் பதிவு செய்திருக்கிறேன்.
விரைவில் இந்தப் புத்தகக் காட்சியில் அந்தப் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும். புத்தகக் காட்சியில் நல்ல திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என விரும்பினேன், ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அறிவிக்க முடியவில்லை, இரண்டு நாட்களில் மக்களுக்கான நல்ல செய்தியை வெளியிடுவேன்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
மார்ச் 6ஆம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0