தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவை மாற்றி அமைத்து அதன் துணைத் தலைவராக பொருளாதார அறிஞர் முனைவர் ஜெயரஞ்சனை நியமித்தார். அவரோடு பல்வேறு நிபுணர்களும் இக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் முதல் கூட்டம் இன்று (ஜூலை 2) சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரையாற்றிய குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒரே சீராக மேம்பாடு அடைந்த பகுதிகளாக மாற வேண்டும். பின் தங்கிய சமூகம், பின் தங்கிய மக்கள் என்று யாரும் இருக்கக் கூடாது. ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் ஆனாலும் கரையாத நிலையான வளர்ச்சியை தமிழ்நாடு அடைய வேண்டும். அதற்கான திட்டமிடல்கள் ஒவ்வொரு துறையிலும் தேவை.
மேலும் பொருளாதார வளர்ச்சியும் சமூக நலத் திட்டங்களும் ஒன்றுக்கொன்று கைகொடுத்து செயல்பட்டதால்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென் பாராட்டியுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல. நிதி மூலதனம் அல்ல, வளர்ச்சி என்பது அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்க வேண்டும். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு தமிழ்நாடு அரசு செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ வேண்டும்”என்றும் பேசினார்.
கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ராம சீனிவாசன் உள்ளிட்ட மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
**-வேந்தன்**
�,