ஸ்ரீராம் சர்மா
எட்டயபுரத்து திராவிடப் பெருங்கவி சுப்ரமணிய பாரதியாரின் நூறாவது நினைவு நாள் வழக்கத்துக்கு மாறாக எழுச்சியோடு கொண்டாடப்பட்டது !
அந்த எழுச்சிக்கான பெருங்காரணம் நமது முதலமைச்சரின் அருங்குணம் !
பாரதியாரின் நினைவு விழாவை அரசு கொண்டாடுவது வழக்கம்தானே. அந்த மகாகவியும் கொண்டாடப்படுவதற்கு உரியவர்தானே ! அதிலென்ன ஆச்சரியம் எனலாம் !
இதுகாறும், பாரதியார் என்பவர் தனிப்பட்டதோர் சமூகத்துக்கு மட்டுமே சொந்தமானவர் என்பது போல, அவர் வாழ்ந்த திருவல்லிகேணியின் நாலு மாட வீதிகளை மட்டுமே சுற்றிவந்து “ஜதிப்பல்லக்கு“ கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த வழமையை மாற்றி….
“எங்கள் திராவிடக் கவியல்லோ…’ என இன்றைய முதலைமைச்சர் காட்டி நின்ற காட்சிதான், இதுகாறும் எந்த முதலமைச்சரும் கொண்டிராத அந்த மாட்சிதான் உலகத்தமிழர்களால் இன்று உயர்ந்தோதப்படுகின்றது !
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திராவிடப் பெருங்கவியாம் பாரதியாரின் திருவுருவப் படத்துக்கு முன் நிமிர்ந்து நின்று மூன்று முறை நெக்குருக மலர் சொறிந்து வணங்கினார் !
ஞானமிகு தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சரது அந்த அணுகுமுறை நமக்கு எதைக் காட்டுகிறது ?
“மக்களின் ஒருங்கிணைந்த வாழ்வே எனது எஞ்சிய வாழ்வின் நோக்கம் ! மக்களின் நலனுக்காக எந்த மாச்சரியத்தையும் தூக்கி எறிய நான் தயாராக இருக்கிறேன்.
திராவிடப் பெருமண்ணின் திரண்ட வாழ்வை நோக்கியே எனது அரசாட்சி அமையும். அதுவே, எனக்கான தத்துவம். மக்களின் நிம்மதியே எனக்கான ஆன்மீகம் ! அதுவே, என்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட ஜனநாயகத்துக்கு நான் செய்யும் நியாயம் ! ”
இப்படியாக எல்லாம் அவர் சொல்வதாகத்தான் அவரது செயலை நேற்று முதல் ஏற்றிப் போற்றிக் கொண்டிருக்கின்றது உலகம் !
எனதெளிய அறிவுக்கு எட்டியவரை இரு திருக்குறட்பாக்களைத்தான் தனது ஆட்சிக்கான வழிமுறையாக அவர் கொண்டிருக்கிறார் எனப்படுகிறது !
ஒன்று,
**தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்**
**சொல்லலும் வல்லது அமைச்சு.**
நற்செயல்களைத் தேர்ந்தெடுத்து, அதனை ஆராய்ந்தறிந்து, வாய்ப்பமையும் தருணத்தில் அதனை உன்னிப்புடன் எடுத்துச் சொல்லும் அறிவார்ந்த அமைச்சரவையை அவர் அமைத்துக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு குறள்….
**படை குடி கூழமைச்சு நட்பரண் ஆறும்**
**உடையான் அரசருள் ஏறு !**
அதாவது, உணர்வோடிய தொண்டர்கள், நாட்டுப்பற்றோடிய மக்கள், பஞ்சம் அறியாத வயிறு, அயராது உழைக்கும் அமைச்சர்கள், அண்டை மாநில நட்பு, உறுதி மிக்க காவற்படை இவையான ஆறு கூறுகளையும் ஒருங்கே கொண்டவனே அரசர்களும் ஆண் சிங்கம் என்பதே குறளதன் பொருள் !
அந்த உயர்ந்த குறளுக்கோர் இலக்கணமாக திராவிட சிங்கமாக இன்றைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திகழ்கிறார் என்றால் அதனை நல்லுள்ளம் கொண்டவர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்பது எனது துணிபு !
இதனை சந்தர்ப்பவாத கட்டுரையாக எவரும் கொண்டுவிட முடியாது. அது குறித்த நியாயத்தை பின்பு சொல்லத்தான் போகிறேன்.
இன்றைய நிலையில், நாம் வாழும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நமக்கு எப்படியான வழியினைக் காட்டுகிறார் என்பதுதான் நமக்குப் பிரதானம் !
அப்படிப் பார்த்தால்…
“ஒன்றிய தேசத்துக்குள் உள்ளடங்கியதுதான் திராவிடத் திருமண் என்பதை எந்த மாற்றுக் கருத்துமின்றி உளமார ஏற்கிறோம். அதே சமயத்தில், இந்த திராவிடத் திருமண்ணின் மொத்த அறிவுச் சொத்தும் எமக்கே உரியது. அதை அயலார்கள் கூறுபோட அனுமதியோம்…“
என்பதாகத்தான் பாரதியாரைக் கொண்டாடிய முதலமைச்சரின் அரசியல் தெளிவாற்றலைக் கொள்ள முடிகின்றது.
பெரும்பான்மையோ அல்லது சிறுபான்மையோ அனைத்து சமூகமும் எனது அரசாட்சிக்கு உட்பட்டதே. சகலத்தையும் அரவணைப்பேன் என்கிறார்
அந்த வகையில் ஒட்டு மொத்த சமூகத்தின் மேன்மைகளையும் தாயென அரவணைத்து போகும் அவரது அரசியலாற்றலை எளிய கலைஞன் மனமுருக வழிமொழிகிறேன் !
நாடாளுமன்ற நாவரசி கனிமொழி எம்.பி தனது ஆசைக்குரிய மீசைக் கவிஞனுக்கு மலரஞ்சலி செலுத்தி அவரது நினைவை தமிழாய்ந்த தன் மார்போடு ஒற்றிக் கொண்ட காட்சியும், சொல்லரசி தமிழச்சி தங்கபாண்டியன் வாழிய எம்மான் என வணங்கி நின்ற காட்சியும்….
சங்கத்தமிழ் அறிந்த அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழாசானை வணங்கி நின்ற காட்சியும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விழா நடத்திய பாங்கும் பாரதியாரின் நூறாவது நிறைவு நாளுக்கென்றே அமைந்தது போல இருந்தது !
இதற்கெல்லாம் ஒரு நாள் முன்னதாகவே செப்டம்பர் பத்தாம் திகதி அன்று தமிழ்நாட்டு சட்டசபையின் மொத்த மேஜைகளையும் இடிமுழக்கமென அதிர வைத்தார் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் !
பாரதியாரின் நூற்றாண்டில் அவரது மேன்மைகளை நாங்கள் உயர்த்திப் பிடிப்போம் என்பதாக பதினான்கு அறிவிப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாகப் மளமளவெனப் படித்த அந்த தருணத்தில் எட்டயபுரத்தின் அந்தக் கதவம் சட்டென அசைந்து நின்றிருக்கும் !
அன்றைய சட்டசபைக் குறிப்பேடு திராவிட சித்தாந்தத்தின் தெளிவையும் திறனையும் ஆழப் பதிந்து கொண்டது !
மனம்போன போக்கில் இரு நாட்களுக்கு முன்பு, [‘திராவிடப் பெருங்கவி’ ](https://minnambalam.com/politics/2021/09/09/8/the-great-dravidian-poet) என்னும் தலைப்பில் பாரதியாரைக் குறித்து மின்னம்பலத்தில் எழுதினேன்.
குயில் அமர்ந்த தருணம் கோயில் மணியின் நா புரண்ட கதையாக கணீரென எழுந்துவிட்டன முதல்வரின் சட்டசபை அறிவிப்புகள் !
ஒன்றல்ல, இரண்டல்ல வரிசைகட்டின திராவிட மேன்மைகள்…
கப்பலோட்டிய வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்களுக்கு மேன்மை, கடலூர் அஞ்சலையம்மாளுக்கு மேன்மை, அயோத்திதாசருக்கு மேன்மை, பூலித்தேவருக்கு மேன்மை, அவரது படைத்தளபதி ஒண்டிவீரனுக்கு மேன்மை என அவரது சகல தரப்பினருக்குமான அரவணைப்பையும் கண்டு தமிழுலகம் மனம் குளிர்ந்தது !
இன்றைய முதல்வருக்கு எப்புறத்தில் இருந்தும் எதிர்ப்பு இல்லை. அது, எந்த நிலையிலும் தளராது மென்மேலும் தொட்டுத் தொடர வேண்டும் என்பதே நமது அவா ! .
பாரதியின் சில வரிகளை இங்கே நினைவு கொள்கிறேன்…
**மெய்த்தவர் பலருண்டாம் ; வெறும்**
**வேடங்கள் பூண்டவர் பலருமுண்டாம் !**
**உய்த்திடு சிவஞானம் கனிந்து **
**ஓர்ந்திடும் மேலவர் பலருண்டாம் !**
**பொய்த்த இந்திர சாலம் ; நிகர்**
**பூசையும் கிரியையும் புலை நடையும் **
**கைத்திடு பொய் மொழியும் கொண்டு **
**கண்மயக்கால் பிழைப்போர் பலராம் ! **
அதுபோன்ற கண்மயக்குகளை எல்லாம் அப்பால் உதறித் தள்ளும் ஆழ்ந்த அரசியல் அனுபவமும் தேர்ந்த அறிவாற்றலும் கொண்டவர் என்பதால் அதிகம் கவலையில்லை.
இப்படியே, இதுபோலே தொடருமாயின் அகண்ட அரசியல் ஒன்றினுக்கு அவரால் அடிகோல முடியும் என்பது எனது துணிபு !
ஆம், தென்னகமாம் திராவிடத்தின் தொப்பூழ் கொடி தமிழ்நாடு அதன் மைய மஜ்ஜையாக இன்று முக ஸ்டாலின் இருக்கிறார்.
அவரை அச்சாணியாகக் கொண்டு, உணர்வின்பாற்பட்ட தமிழ்நாட்டின் தலைமையில் திராவிடத்தை திரள வைப்பது நலம் ! சீனத்தின் புளித்த கண்களில் இருந்து தப்பிக்க தேசியத்துக்கு அது வழி கோலும் !
என்ன இது சம்பந்தமேயில்லாத வரிகளாக இருக்கிறதே என சிலர் நெளிந்தபடி வினவலாம் !
இப்படித்தான், பல ஆண்டுகளுக்கு முன்பே மாசிடோனிய பாபா வான்கா, அதன்பாற்பட்ட உள்ளுணர்வு இரண்டும் கொண்டு சீன ட்ராகனின் உலக ஆக்ரமிப்பை குறித்து நான் எச்சரித்து எழுதியபோது உள்நாட்டு பத்திரிக்கை நண்பர்கள் என்னை மேலும் கீழும் பார்த்தார்கள்.
இன்று, கொரானா காலத்தோடு நெருக்கி வரும் உலக அரசியலைக் கண்டவர்கள் ‘எப்படி, இப்படி துல்லியமாகச் சொல்ல முடிந்தது…’ என ஆச்சரியப்பட்டுக் கேட்கிறார்கள்..
அதே உள்ளுணர்வோடு இன்று சொல்கிறேன்…. அடுத்த பத்து ஆண்டுகளில் உலக அரசியல் ஆசிய கண்டத்தை மையம் கொண்டே சுழலும். சீனம் அதன் ஆரமாக உழலும். அந்த பாழரசியலுக்கு இந்தியா இரையாக்கப்படக் கூடும்.
திராவிடம் என்பதை ஏன் தாங்கிப் பிடிக்கிறேன், திராவிட அச்சாணியான மு.க. ஸ்டாலின் இந்திய தேசியத்துக்கு வலுசேர்ப்பார் என ஏன் நான் நம்புகிறேன் என்பதெல்லாம் அன்று விளங்கும் !
**கட்டுரையாளர் குறிப்பு**
**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
�,”