ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்ற கேள்விக்கு மு.க.அழகிரி பதிலளித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவில் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவருமான மு.க.அழகிரி, கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. சமீப காலமாக அழகிரி மீண்டும் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கிறார் என்ற தகவல்கள் வந்தன.
அழகிரி அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளிவர, தான் பாஜகவில் இணையப்போவதாக சிலர் காமெடி செய்துகொண்டிருப்பதாக சாடினார். அரசியல் நிலைப்பாடு தொடர்பாக ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை செய்ய இருந்தது ரத்துசெய்யப்பட்டது.
மதுரையில் கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரியிடம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு கண்டிப்பாக இருக்குமெனவும், புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக கேட்கப்பட போகப் போகத் தெரியும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மதுரை அழகர் கோயிலில் மு.க.அழகிரி இன்று (டிசம்பர் 10) மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டமன்றத் தேர்தலில் உங்கள் பங்களிப்பு எந்த வகையில் இருக்கும் என கேட்கப்பட, “கட்சி ஆரம்பிப்பது, கூட்டணி அமைப்பது போல வாக்களிப்பது ஒரு பங்களிப்புதான். ஆகவே, வாக்களிப்பதுதான் என் பங்களிப்பு. யாருக்கு ஓட்டு போடுவேன் என்பதை சொல்ல முடியாது” என பதிலளித்தார்.
அரசியல் கட்சி ஆரம்பிப்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறதா என்ற கேள்வியை அழகிரியிடம் மீண்டும் செய்தியாளர்கள் முன்வைக்க, “ஆலோசனை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்” என பதில் சொன்னார்.
ரஜினி கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக கூறியதற்கு நேரிலேயே வாழ்த்து தெரிவித்துவிட்டதாகக் கூறிய அழகிரியிடம், ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா எனக் கேட்க, அவரது படத்தில் வாய்ப்பு கொடுத்தால் சேர்ந்து நடிக்கலாம் என சொல்லிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டார். செய்தியாளர்களின் அனைத்து கேள்விகளுக்கு பட்டும் படாமல் குதர்க்கமாகவே பதிலளித்தார் அழகிரி.
**எழில்**�,