சூடாகப் போய்க்கொண்டிருக்கும் மேற்குவங்கத் தேர்தல் களத்தில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக பிரச்சாரக் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று ( மார்ச் 7) நடைபெற்றது. முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் சவ்ரவ் கங்குலி இதில் பங்கேற்பார் எனக் கூறப்பட்டநிலையில், பழம்பெரும் நடிகரான மிதுன் சக்ரவர்த்தி திடீரென மேடையில் தோன்றி, பாஜகவில் இணைந்து கொண்டதாக அறிவித்தார்.
பாஜகவுக்கு எதிராக வங்கத்தின் மகள் எனும் முழக்கத்தை மம்தா முன்னிறுத்தி வருகிறார். இதை முன்பே அறிந்த பாஜக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சௌரவ் கங்குலியை முதலமைச்சர் வேட்பாளராக்க முயன்றது. ஆனால் கங்குலிக்கு மாரடைப்பு வரவே அவர் இந்தக் கட்டத்துக்குள் வராமல் போனார். யாரும் எதிர்பாராதவகையில் மம்தாவுக்கு ஒரு காலத்தில் நெருக்கமான மிதுன் சக்ரவர்த்தியை பாஜக கொண்டுவந்து மேடை ஏற்றியிருப்பது, அந்த மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
70 வயதாகும் மிதுன், மூன்று முறை தேசிய விருது பெற்றவர். 80-களில் இந்தியில் அமிதாப் பச்சன் என்றால் வங்காளத் திரையுலகின் முக்கிய நட்சத்திரம், இவர். இந்தியிலுமே இவரின் கொடி பறந்தது. தமிழ் உள்பட 8 மொழிகளில் நடித்திருக்கிறார்.. இன்னும் நடித்துக்கொண்டே இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ’குரு’ படத்தில் மிதுன் நடித்திருக்கிறார்.
இராம்கோபால் வர்மா இயக்கத்தில் இவர் நடித்த ’12’ மணி’ திரைப்படம் கடந்த ஜனவரியில் வெளியானது. ஓடிடி தளத்திலும் தொடர்களில் நடித்துவருகிறார், மிதுன்.
இவர், அரசியலுக்கு வந்தது என்றால் 2014 சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணமூல் கட்சி வெற்றிபெற்றதை அடுத்து, மம்தாவால் மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். ஆனால் அடுத்த இரண்டாவது ஆண்டிலேயே அந்தப் பதவியிலிருந்து மிதுன் விலகினார். 5 ஆண்டுகள் அரவமே இல்லாமல் இருந்தவர் இப்போது மீண்டும் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் குதித்துள்ளார்.
இடையில், மம்தாவையும் அவரின் கட்சியினரையும் தொடர்புபடுத்திய சாரதா ஊழல் வழக்கில் மிதுனிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதையடுத்து அவர் பயத்தால் தன்னிடமிருந்து விலகிநிற்பதாக மம்தா வெளிப்படையாகவே கூறினார். அதையடுத்த ஓராண்டில் மிதுன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
சாரதா சீட்டு நிறுவனம் நடத்திய தொலைக்காட்சியின் முகமாக, விளம்பரத் தூதராக மிதுன் இருந்தார். இப்போதுகூட மணப்புரம் கோல்டு நிறுவனத்தின் வங்க முகமாக அவர் இருக்கிறார். பழைய பேனாசோனிக் முதல் இப்போதைய கோ டாடி இணையதள நிறுவனம்வரை பல நிறுவனங்களின் விளம்பர முகமாக இருக்கும் மிதுனின் கவனத்தைப் புரிந்துகொள்வது மிகவும் எளிமையானதுதானே!
பிரபலத்தைத் தக்கவைக்கும் அவர், சர்ச்சையில் சிக்காமல் கவனமாக விலகிநிற்கவே விரும்புவார். இந்த முறை அப்படி இருக்கமுடியாது. அவரே அந்த நிலையிலிருந்து மாறியிருக்கவேண்டும் அல்லது மாற்றப்பட்டிருக்க வேண்டும்.
எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் மேற்குவங்கத்தில், மீதமிருக்கும் காலத்துக்கான பிரச்சாரத்தில் மிதுன் சக்ரவர்த்திக்கு முக்கியத்துவம் தந்து திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை அவரே நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மற்றபடி புதிய கட்சியில் சேர்ந்தால் அதற்கேற்பப் பேசுவது அரசியல்வாதிகளுக்கு அதுவும் தேர்ந்த நடிகருக்கு கம்ப சூத்திரமா என்ன? ஆனாலும் நேற்று, “ நான் ஒன்றும் விசமில்லாத பாம்பு இல்லை. சுத்தமான நாக பாம்பு இனம். கொல்வதற்கு ஒரே கடி போதும்” என்று அவர் பேசியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்!
**- இளமுருகு**
�,