ஸ்ரீராம் சர்மா
இந்திய மண்ணில் பண்டிகைகளுக்குக் குறைவில்லை.
வடபுலத்து லோரிக் கொண்டாட்டமும், தென்புலத்து தைப் பொங்கலும் அடுத்தடுத்து அமையும் விசித்திரம் படைத்த இந்தத் திருமண்ணில்…
ஆண்டு முழுவதும் ஆயிரமாயிரம் பண்டிகைகள் கொலு வரிசை கட்டி நின்றாலும், நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் உச்சப் பண்டிகையானது தீபாவளி!
ஓடியாடிக் களைத்து நிற்கும் மனித வாழ்க்கையின் தோள்களைத் தொட்டுக் கொடுத்து அடுத்த கட்டம் பயணிக்க ஆசுவாசப்படுத்தும் முகமாகத்தான் அனைத்து மதப் பண்டிகைகளும் இங்கே தோன்றின.
வழிவழியாக வந்த அந்தக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் அந்தகாரமாக வந்தடைத்தது பெருந்தொற்று!
2017இல் இதே [மின்னம்பலத்தில்](https://minnambalam.com/public/2017/10/18/1508265030) தீபாவளி குறித்து நான் எழுதிய கொண்டாட்ட கட்டுரை இங்குதான் இருக்கிறது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், ‘கொரோனா’ எனும் அந்தப் பெருந்தொற்று மனித கொண்டாட்டத்தை நடுங்கடல் புயலாகப் புரட்டிப்போட்டு விட்டது.
காலமெனும் ஆசான் ‘பெருந்தொற்று’ எனும் பிரம்பை ஓங்கிச் சொடுக்க, மானுடம் மதி மயங்கிப் போன அந்த நாட்களில்…
நாகரிகம் படைத்த சமுதாயம் என நம்மால் நம்பப்படும் மேலை நாகரிக நாடுகள் பலவும் பெருந்தொற்றை காரணம் காட்டித் தன் மக்களை தெருவில் இறங்கி போராட வைத்தது.
ஆனால், நமது இந்தியத் தமிழ் மண்ணோ ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துக் கொள்ளாமல் அவரவர் அளவில் உதவிக்கொண்டு மானுடம் வென்றது. உலகை ஆச்சரியப்படுத்தி நின்றது.
இதுபோன்ற அழிக்கும் சக்திகள் பலதையும் கால காலமாக எதிர்கொண்டு மீண்டு கொண்டதுதான் மனித இனம் என்பதால், இந்தப் பெருந்தொற்றையும் எதிர்த்துப் போராடி குறைந்த இழப்புகளோடு மீண்டெழுந்தே விட்டது.
தன்னளவில் மீண்டது மட்டுமல்லாமல், தன் சமூகத்தையும் உயர்த்தி மீட்ட இந்த தாயாதி மண்ணை, பாரதியார் மொழிந்தது போல ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’ என வீழ்ந்து வணங்குகிறேன்!
அப்படி, மீண்டெழுந்த சமூகத்தின் வாழ்வும் – கொண்டாட்ட வியூகமும் முந்தைக்கு நேர் மாறாக – அதே சமயத்தில், முன்னிலும் தெளிவாக சமைந்திருப்பதைக் கண்ணாரக் காண்கிறேன்.
கொண்டு கூட்டிப் பார்த்தால், கொண்டாட்டம் என்பதை அந்தந்த தலைமுறையும் – அதனதன் சூழல்களும்தானே தீர்மானிக்கிறது!
அப்படியாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான இந்த வருட தீபாவளி மானுடம் ததும்பும் தீபாவளியாக விடிந்ததாகவே நம்புகிறேன்.
ஆம், கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான தமிழ் மண் பெரிதும் மாறிப் போனது. இளைஞர்கள் மனம் – குணம் மாறிப் போனார்கள்.
குறிப்பாக, இந்த மண் படுபாழடைந்ததற்கு அதிகாரணமான ‘ரசிக மனம்’ தன்னளவில் வெகுவாக மீண்டுவிட்டதைப் பட்டவர்த்தனமாகக் காண முடிகிறது.
‘தீபாவளி தியேட்டர்’ எனும் கொத்தடிமை ரசிக கலாச்சாரம் வழியே காலகாலமாக சறுகறுகப்பட்ட விவரமற்ற போலிக் கொண்டாட்டங்கள் அனைத்தையும் இன்றைய இளைஞர்கள் வெறுத்து ஒதுக்குவதை உணர முடிகிறது.
காலத்தின் அருமையை உணர்ந்து கொண்ட இன்றைய இளைஞர்கள் இனியும் எங்களை ஏமாற்ற முடியாது என்கிறார்கள்!
“ஜெய் பீம்” என்னும் திரைப்படம் அவர்களுக்குப் பிடித்துப் போனதே அதற்கான சாட்சி!
தீபாவளி என்பது என்ன?
அன்றந்த பெருமாளுக்கு தன் சுற்றத்தார்களைப் பிறர் கொடுமைப்படுத்தும் செயல் பொறுக்கவில்லை. அதனால், அந்த நரகாசுரனை அழிக்க அந்தக் கடவுளே கீழிறங்கி வந்த நிகழ்வுதானே அது!
இன்று, என் கண்முன் நிகழும் கொடுமை என்ன? எளிய மனிதர்களின் இல்லாமைதானே? இயலாமைதானே? அதை அழிக்க என்னால் இயன்றதை செய்வேன் என இளைஞர்கள் மனதில் எழுச்சி உண்டாவதே ஒளி மிகும் தீபாவளி!
இளையோர் மனதுக்குள் அந்த உத்வேகத்தைச் செலுத்த, இந்த தீபாவளி திரைக்குத் தன்னை அர்ப்பணித்த சூர்யா என்னும் நடிகனை நிறைந்து வாழ்த்தலாம்.
ஆம், அந்த நடிகன்தான் இன்று இளைஞர்களைச் செயலளவில் வழி நடத்துகிறான்.
செகண்டு டிவிஷன் ஆடிக் கொண்டிருக்கும் எனது மகன் பெங்களூரில் கிரிக்கெட் ஆடி சம்பாதித்த பணத்தை பல மாநில நண்பர்களோடு இணைந்து, பட்டாசு பெட்டிகளை வாங்கிக் கொண்டு, தெருவாகச் சென்று, இயலாத சிறுவர்களைக் கண்டு, தீபாவளி வாழ்த்து சொல்லி, உச்சந்தலை தடவி, பரிசளித்து வந்த செயலைக் கேட்டு ‘ஜெய் பீம்’ என வாழ்த்தினேன்!
எளியோருக்கு நாமும் ஏதேனும் செய்தாகிவிட வேண்டும் எனும் எண்ணம் எங்கெணும் பற்றிப் படர்ந்தால் அதுவே நிஜமான தீபாவளி!
சந்துரு என்றால் நிலா எனப் பொருள்படும்.
தீபாவளி என்பது பெரும்பாலும் அமாவாசையில்தான் வரும். அந்த நாளில் நிலா தெரிவதில்லை.
சந்துரு தெரிவான்!
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!
**கட்டுரையாளர் குறிப்பு**
**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
.
.�,”