ரஜினிகாந்துடன் அமைச்சர்கள் பேசுகிறார்களா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து, 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர்களை சந்தித்து அரசியலுக்கு வருவது குறித்த தனது நோக்கங்களையும் விளக்கினார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்தின் நெருங்கிய ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், “கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் ரஜினிகாந்த் ஆகஸ்ட் மாதம் கட்சி ஆரம்பிக்க சாத்தியமில்லை. நவம்பர் மாதத்தில் கட்சி ஆரம்பிப்பார்” என்று தெரிவித்தார். அப்படி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில் தற்போது அமைச்சர்களாக உள்ள பலரும் அதில் இணைய பேசிவருவதாக தகவல்கள் அடிக்கடி வெளிவருகின்றன.
இந்த நிலையில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியிலுள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகள் தினத்தில் தியாகிகள் செண்பகராமன், சங்கரலிங்கனார், ஆர்யா (எ) பாஷ்யம் ஆகியோரின் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் இன்று (ஜூலை 17) மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், ரஜினிகாந்திடம் அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவருகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இதுபற்றிய அனைத்து தகவல்களும் யூகத்தின் அடிப்படையில்தான் வருகின்றன. நடிகர் ரஜினிகாந்துடன் அமைச்சர்கள் யாரும் பேசவில்லை. அமைச்சர்கள் யாரும் அவ்வாறு துரோகம் செய்பவர்கள் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் மீது விசுவாசம் வைத்துள்ள கூட்டம்தான் அதிமுக” என்று பதிலளித்தார்.
**எழில்**�,