Zவிராலிமலையில் விஜயபாஸ்கர் மனைவி?

Published On:

| By Balaji

2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க மக்களோடு மிகவும் நெருக்கமாகி வருகிறார்கள் அரசியல் தலைவர்கள். ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ ஒரு படி மேலே போய் ஒவ்வொரு குடும்பத்தினரோடும் ஐக்கியமாகும் வேலையை துவங்கி விட்டார்.

கடந்த வருடம் 10ஆம் தேதி விபத்தில் மரணமடைந்த தனது முன்னாள் பி.ஏ.வெங்கடேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வெங்கடேஷின் சொந்த ஊரான பரம்பூரில் மாநில அளவிலான கபடிப் போட்டியை நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றியுள்ள கிராமங்களின் இளைஞர்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் டி சர்ட்டோடு சேர்த்து ‘பாக்கெட் மணியும்’ வழங்கியிருந்தார். இந்நிலையில் அதற்கு மறுநாளே தனது விராலிமலை தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு வீடு வீடாகச் சென்று ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்’ என பக்காவாக பிரின்ட் செய்யப்பட்ட துணிப்பையில், அரிசி, வெல்லம், நெய், உலர் திராட்சை, முந்திரி பருப்பு, கரும்பு போன்றவற்றுடன் அட்டைப் பெட்டியில் பித்தளை பானை, கரண்டி உள்ளிட்ட பொருட்களை வைத்து அந்தந்த பகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள் மூலம் வழங்கும் பணியையும் முடுக்கி விட்டிருக்கிறார்.

இதற்காக, சுமார் 2 லட்சம் பித்தளை பானைகள் ஆர்டர் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் முதற்கட்டமாக பொங்கல் பொருட்களோடு 1 லட்சம் பானைகளை வினியோகிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. ஒருபக்கம் அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 2,500, மறுபக்கம் விஜயபாஸ்கர் வீட்டு சீர் என விராலிமலை தொகுதி மக்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், ‘அமைச்சரின் இந்த அதிரடி பரிசுகளுக்கு காரணமே வேறு’ என நம்மை ஆச்சரியப்படுத்தியது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

“அதாவது, கடந்த 2016 தேர்தலின் போது முத்தரையர்களுக்கு எதிராக அவர் பேசிய வார்த்தைகள் அந்த சமூக மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி அவரது வெற்றி வாய்ப்பே கேள்விக்குறியானது. ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கு கை கொடுத்தது குடும்பத்தினரின் தேர்தல் பிரச்சாரம்தான். மனைவி ரம்யா, மகள் பிரியதர்சினி ஆகியோரின் பிரச்சாரம்தான் சொந்த சாதி வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு வந்து சேர்த்தது. அதே போல இந்த முறை தனது விராலிமலை தொகுதிக்கு அமைச்சர் என்னதான் நிறைய திட்டங்களை கொண்டு வந்திருந்த போதும், சமீபத்தில் தனிப்பட்ட முறையில் அமைச்சர் எடுத்த சர்வேயில்தான் அமைச்சர் மீதான அதிருப்தியும் அதிகரித்துள்ள விசயம் தெரிய வந்த்தாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர், தனது விராலிமலை தொகுதியில் இம்முறை அவரது மனைவி ரம்யாவையே களமிறக்கலாமா என யோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்ததால் ரம்யா அனைவருக்குமே அறிமுகம் என்பதோடு, ‘ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களின் வாக்குகளையும் அள்ளி விட முடியும்’ என உறுதியாக நம்புகிறாராம் விஜயபாஸ்கர்.

அண்ணியை விராலிமலையில் நிற்க வைத்து விட்டு புதுக்கோட்டையில் போட்டியிடலாமா என யோசித்து வருகிறார் அமைச்சர். ஒருவேளை ஒரே ஒரு தொகுதி மட்டுமே கிடைக்கும் பட்சத்தில் விராலிமலையில் ரம்யா மட்டுமே போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது” என்றனர் அவர்கள்.

அதற்கு அச்சாரம்தானா இந்த விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்..?

**பாரதி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share