கொரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 400, 500 என குறைந்திருந்த தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,731 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், டிசம்பர் 31ஆம் தேதி ஆலோசனை நடத்தி ஜனவரி 10ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் , சென்னையில் இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் இனி வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்கள் கோயில்களுக்குச் செல்ல தடை ஆகியவை முதல்வரின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. அதுபோன்று கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
**-பிரியா**
�,