தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு கோவை மாவட்டத்தில் மட்டுமே திமுக நிர்வாகிகள் அதிக அளவில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முதல் பல கீழ் நிலை திமுக நிர்வாகிகள் மீது வரை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து கோவை முழுதும் திமுக நிர்வாகிகள் சமூக இடைவெளியோடு போராட்டம் கைதாகினார்கள். இந்த நிலையில் இன்று (ஜூன் 7) திமுகவின் கோவை மாவட்ட நிர்வாகிகளோடு மட்டும் பிரத்யேக காணொலிக் காட்சிக் கூட்டத்தை நடத்தினார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின்.
கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் கோவை மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., ஆகிய மாவட்டப் பொறுப்பாளர்களும், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி, ஒன்றிய, நகர செயலாளர்களும் கலந்துகொண்டனர். மேலும் கோவை மண்டல சட்டப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களான கே.எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சட்டத்துறைச் செயலாளர் கிரிராஜன், சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி., பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் ந. பழனிசாமி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பின் திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவினரின் கைதுகளுக்கு எதிராக கடந்த 5-ம் தேதி கோவை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகச் செயல்வீரர்கள் முன்னின்று நடத்திய, ஜனநாயக வழியிலான கண்டன ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கொரோனா காலத்தில், அதற்கான விதிமுறைகளையும் தனிமனித இடைவெளியையும் பின்பற்றி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யவும் அமைச்சர் வேலுமணியின் போலீஸ் தயங்கவில்லை.
கடந்த 1-ம் தேதி ஆளும்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்; எங்காவது கைது செய்தார்களா என்றால் இல்லை. அது மட்டுமல்ல; மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அ.தி.மு.க. தலைமையே அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கோவை தி.மு.க.,வினரை மட்டும் கைது செய்கிறார்கள் என்றால்; சட்டம் என்பது கட்சிக்குத் தகுந்தமாதிரி – வளைக்கப்படுகிறது என்பது தானே பொருள்! அதுவும் வேலுமணியின் சொந்த மாவட்டத்தில், கோவை மாவட்டத்தை ஒரு தீவு போல நினைத்து, தனியாட்சி நடத்தி வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. திமுகவினரின் கைதுகள் நிறுத்தப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்த நேரிடும்” என்றும் கூறியுள்ளது திமுக.
இந்நிலையில் இன்று (ஜூன் 7) பிற்பகல் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலினைக் கடுமையாக விமரிசித்துள்ளார்.
“தினம் ஒரு அறிக்கை வெளியிடுவது, அவதூறுப் பிரச்சாரங்களை வெளியிடுவது என புரளிகளாலும் பொய்களாலும் பொதுவாழ்வை வென்றுவிடலாம் என்று யுக்தியோடு புரளி வித்தை செய்யும் ஸ்டாலின் அவர்களே… என் மீது அடுக்கடுக்காக பொய் புகார்களை அள்ளி வீசுவதையும், அடுத்து ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று மக்கள் பணியாளர்களை மிரட்டி, நோய்த் தடுப்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் முடக்க நினைக்கும் பித்தலாட்டங்களை விட்டுவிட்டு, பேரிடர் காலத்தில் மக்களை திசை திருப்பும் மலிவு அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.
**-வேந்தன்**�,