அண்ணாமலைக்கு 24 மணி நேர கெடு விதித்த செந்தில் பாலாஜி

Published On:

| By Balaji

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு 24 மணி நேர கால அவகாசம் தருகிறேன். அதற்குள் அவர் ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று(அக்டோபர் 20) பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “பருவமழையை எதிர்கொள்ளக் கூடிய வகையில் மின்சார வாரியம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதன்படி, மின் வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளன. குறிப்பாக, 93,881 மின்கம்பங்கள், 19,826 கி.மீ மின் கம்பிகள், 4,600 மின் மாற்றிகள் தயார் நிலையில் உள்ளன. வரக் கூடிய பருவமழை காலங்களில் சீரான மின் விநியோகத்திற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது” என்று கூறினார்.

கொள்முதல் தொடர்பான ஆவணங்களை வெளியிடுவோம் என்று தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,”எந்தளவுக்கு நிலக்கரி தட்டுப்பாடு உள்ளது என்பது தெரியும். இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின் தடை ஏற்படுகிற சூழ்நிலையில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் மின் தடைஏற்படாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் 1800 மெகாவாட் அளவுக்குதான் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், தற்போது 3500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தனியாரிடமிருந்து 900 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.

இந்திய அரசின் மின்சந்தையில் இதுவரை 1.04% தான் நாம் மொத்த தேவையில் கொள்முதல் செய்கிறோம். அதிக அளவில் குஜராத் தான் வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்யும் மாநிலமாக உள்ளது, அதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிராவும், ஆந்திராவும் உள்ளன.

ஒரு இயக்கத்தின் தலைவர் எங்கிருந்து மின்சாரம் வருகிறது, எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது, மற்ற மாநிலங்களில் எந்தவிலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேச வேண்டும். தமிழ்நாட்டில், எங்கேயாவது நிலக்கரி பற்றாக்குறையினால் அனல் மின்நிலையங்கள் ஒருமணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம். அந்தளவுக்கு சிறப்பான மின் விநியோகித்தை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல், குறுகிய நோக்கத்துடன் பொதுமக்களிடத்தில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட செய்தியாகும். கடந்த ஆட்சியில் மின் வாரியத்தில் நடைபெற்ற சீர்கேடுகளை கண்டுபிடித்து, வாரியத்தை சீர்படுத்த வேண்டும் என்பதுதான் முதல்வரின் உத்தரவு.

மின்வாரிய துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து தன்னிடம் ஆதாரம் உள்ளது என்று கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எப்போது எங்கு வெளியிட்டாலும் அங்கு நான் வர தயார். வெளியிடுவேன் என்று சொல்லும்போதே, அவரிடம் எந்த சரக்கும் இல்லை என்பதை உணர்த்துகிறது. 24 மணி நேர கால அவகாசம்கொடுக்கிறேன். அதற்குள்ளாக தன்னிடம் இருக்கும் ஆதாரத்தை வெளியிட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆதாரம் இல்லாததை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

மொத்த மின்சாரத்தையும் 20 ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்வதுபோலவும்,மின்சார வாரியத்துக்கு பெரிய இழப்பை ஏற்படுத்துவது போலவும் மாயைத் தோற்றத்தை உருவாக்கி மக்களிடத்தில் அரசுக்கு அவப்பெயர் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளியிடப்பட்ட செய்தி.

அதே தலைவரை நீங்கள் சந்திக்கும்போது, அவரிடம் குஜராத்தில் எவ்வளவு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது, எந்தவிலையில் வாங்கப்படுகிறது என்பதை நீங்கள் கேளுங்கள். கேட்டுவிட்டு எனக்கு சொல்லுங்கள்.

தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். தான் ஒரு அரசியல் தலைவர் என்பதை உணர்ந்து, இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும அவதூறு செய்திகளை தவிர்க்க வேண்டும். ஆதாரம் இருந்தால், வழக்கு தொடுங்கள் அதையும் நாங்கள் சந்திக்க தயார்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share