தமிழ்நாட்டில் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடு கட்டி தரப்படும் என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவியர் விடுதியில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று(ஜூலை 24) திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், ”முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் அவரவர் துறை தொடர்பான வளர்ச்சி பணிகளை சுற்றுப்பயணம் மேற்கொண்டுஆய்வு செய்து வருகிறோம். இன்றைக்கு மதுரை மாவட்டத்தில் சிறுபான்மையினர் சார்பில் இயங்கும் பெண்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டேன். சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மாணவ மாணவிகள் விடுதிகள் நல்ல தரமாகவும், பாதுகாப்பாகவும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்தப்படுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டு முகாம்களில் இலங்கை தமிழர்கள் 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற உரிமையை கொடுக்க வேண்டும் என்பதில் தனிகவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதுபோன்று, அவர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக சிறப்புக் குழு ஒன்று அமைக்கும். முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு வீடு கட்டி தரப்படும்.
கடந்த இரண்டு மாதங்களில், வெளிநாடுகளில் 32 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 32 பேரில், 30 பேரின் உடல்கள் தமிழ்நாடு கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13,553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு, வெளியே வசித்து வருகிறது.
கடந்த ஆட்சி சரியாக செயல்படாத காரணத்தினால் மக்கள் திமுகவை தேர்வு செய்துள்ளனர். நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காக போராட்டங்களை அறிவித்துள்ளனர். அவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்” என்று கூறினார்.
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையும், நலவாரியமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முகாம்களில் உள்ள அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
**-வினிதா**
�,