மதுரை எம்.பி சு.வெங்கடேசனை அவரது அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சந்தித்துப் பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு முகாமைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று (பிப்ரவரி 23) தொடங்கி வைத்தார். தனது அலுவலகத்துக்கு வர வேண்டும் என அமைச்சருக்கு வெங்கடேசன் கோரிக்கை வைத்தார். அதையேற்று மதுரை ரயில் நிலையம் அருகிலுள்ள சு.வெங்கடேசனின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு செல்லூர் ராஜு சென்றார். தொகுதி நிலவரங்கள் குறித்து இருவரும் சிறிது நேரம் உரையாடினர். அமைச்சருக்குத் தான் எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினமான வேள்பாரி புத்தகத்தை சு.வெங்கடேசன் பரிசாக வழங்கினார்.
அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவர் எதிர்க்கட்சிக் கூட்டணியில் உள்ள மக்களவை உறுப்பினரின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, இது ஒன்றும் அதிசயமல்ல, ஆரோக்கியமான அரசியல்தான் என்று தெரிவித்தார்.
மேலும், “தனிப்பட்ட முறையில் சு.வெங்கடேசன் எழுத்துகளுக்கு நானும் வாசகன். அவர் எழுதிய நூல்களைப் பற்றி பேசினோம். அப்படியே அலுவலகத்துக்கு வந்துவிட்டோம். மத்திய அரசிடமிருந்து மதுரை மாநகருக்குத் தேவையான நிதியைப் பெறுவது குறித்து பேசவே சந்தித்தேன். கட்சி, கொள்கை வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், மக்கள் பணிக்காக இணைந்து செயல்படுவதில் தவறில்லை” என்று குறிப்பிட்ட செல்லூர் ராஜு,
“எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்று நாங்கள் பாரபட்சம் பார்ப்பதில்லை. கீழடி அகழ்வாய்வுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் சு.வெங்கடேசன். அதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி, தற்போது ஆறாம் கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. ஆரம்ப காலத்திலிருந்து பொதுவுடைமை தோழர்களுடன் துணை நின்றவர்கள் நாங்கள்” என்று தெரிவித்தார்.
**-த.எழிலரசன்**�,