பழைய அர்ச்சகர்களை நீக்கவில்லை: சட்டப்பேரவையில் முதல்வர்

politics

அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி திட்டம் கைவிடப்படாது. பழைய அர்ச்சகர்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் அர்ச்சகர் பயிற்சி முடித்த 58 பேருக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 14 ஆம் தேதி பணி நியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 216 பேருக்குப் பணி ஆணையும் பணி நிரந்தர ஆணையும் வழங்கப்பட்டது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்துக்கு அதிக ஆதரவு கிடைத்தது. அதே சமயத்தில் புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதால், பழைய அர்ச்சகர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவதாகக் குற்றச்சாட்டும் இணையங்களில் பரவியது.

இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில், யாரையும் விடுவித்து பணி நியமன ஆணை வழங்கவில்லை. கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசியலுக்காக சிலர் குறை கூறுகின்றனர். சமூக நீதியை சீர்குலைப்பதற்காக சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். ஏற்கனவே உள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை.

கலைஞர் கொண்டு வந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது, அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம். பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சட்டம் இயற்றினார் ” என்று கூறினார்.

இதனிடையே, சென்னை கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “முதல்வர் ஸ்டாலின், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில், காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் 216 அர்ச்சகர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கினார்.

இதில், 58 நபர்கள் கோயில் அர்ச்சகர் 2ஆம் நிலையில் ஆகம விதிப் படி முறையாகத் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அந்தந்த திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எப்போதும் யாரும் முன்னேறிவிடக் கூடாது என்று நினைப்பவர்கள் இவ்விவகாரத்தில் விஷத்தன்மை கொண்ட கருத்துகளைக் கூறி வருகின்றனர். 70 ஆண்டுகள் கடந்து பணி மூப்பு பெற்றவர்களும் கோயில்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள், கோயில்களில் உள்ள உப கோயில்களில் அர்ச்சனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 58 பேரை இன்று திருக்கோயில் பணியாளராக நியமித்துள்ளோம். அடுத்த தலைமுறைக்கு எனச் சீர்திருத்த நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். பட்டாசார்யார்களையோ அர்ச்சகர்களையோ யாரையும் பணியிலிருந்து வெளியேற்றும் எண்ணம் இல்லை.

சில ஊடகங்களும், ஒரு சில முகநூல் நண்பர்களும் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்கி, ஏதோ அர்ச்சகர்களுக்கு எதிரான அரசுபோல், இந்த அரசைச் சித்தரிக்க நினைக்கிறார்கள். திமுக பதவியேற்ற இந்த மூன்று மாதங்களில் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்ததை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையைப் பொறுத்தவரையில் இந்துக்கள், இந்துத்துவா என்பதைக் கையில் எடுப்பவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது என்ற காரணத்திற்காக இப்பொழுது அர்ச்சகர் நியமனப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம்.

தேனுபுரீஸ்வரர் கோயிலில் சுஹாஞ்சனா எனும் பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாடும் பாடல் உருகாத மனதைக் கூட உருக்கும். ஆகம விதிப் படி பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

புதிதாக 58 பேரை நியமிக்கப்பட்டதன் மூலம் யாராவது பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தால் அவர்களுக்கு உடனடியாக பணி வழங்கப்படும்.

யாரையும் கோயிலிலிருந்து வெளியேற்றும் எண்ணம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த நியமனமும் இல்லாமல் சிதிலமடைந்து கிடந்த இந்து சமய அறநிலையத் துறைக்கு முதல்வர் கொடுக்கும் சீர்திருத்தங்களுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து வலுசேர்க்க வேண்டும்” என்றார்.

அரசியல் சட்டத்தை மதிக்காமல், இந்துமத கோட்பாடுகளில் முதல்வர் தலையிடுகிறார், கடும் விளைவுகளைத் தமிழக அரசு சந்திக்க வேண்டியது இருக்கும் எனச் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளாரே என்ற செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், “மிரட்டலுக்கு அஞ்சுகிற அரசு தமிழக அரசல்ல. 1971 இந்து சமய அறநிலைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு, 60 வயது வரை அர்ச்சகர்களுக்கு வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களை அர்ச்சகராக்கியது கலைஞர் செய்த தவறு என்றால் அந்த தவறை முதலமைச்சர் ஸ்டாலினும் செய்வார் .இந்து சமய அறநிலையத் துறையின் 627 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டுள்ளோம். பரம்பரை அறங்காவலர்கள் எனும் பெயரில் சொத்துக்களைச் சூறையாடியவர்களைச் சட்ட ரீதியாக நீக்கி இருக்கிறோம். ” என்று விளக்கமளித்தார் அமைச்சர் சேகர்பாபு.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.