பாஜக அதிமுக ஆட்சியில் தவறு நடக்கவில்லையா?: சேகர்பாபு

Published On:

| By Balaji

கடந்த பத்து ஆண்டு ஆட்சி காலத்தில் நடந்த குற்றச்சாட்டுகளை பாஜக சுட்டிக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று(அக்டோபர் 22) தங்கத்தேர் வீதி உலாவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ”கொரோனா பரவ ஆரம்பித்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி முதல் கோயில்களில் உள்ள திருத்தேர் வீதியுலா வருவது தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து வரப்பெற்ற பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும், பக்தர்கள் பரவசம் அடையும் வகையிலும் இன்று(நேற்று) முதல் திருக்கோயிலில் இருக்கின்ற திருத்தேர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வீதியுலா தொடங்கியுள்ளது. இன்றைக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தங்கத்தேர் வீதியுலாவை தொடங்கி வைத்ததில் இந்த துறை அமைச்சராக பெருமைக் கொள்கிறேன். 65 தங்கத்தேர் மற்றும் 49 வெள்ளித்தேர்கள் முறையாக பராமரிக்கப்பட்டு, இன்று முதல் வீதியுலா வருவதற்கு அனுமதியளிக்கிறது என்று முதல்வர் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடுத்து வருகிறார். தற்போது வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று கொரோனாவால் எந்தவித பாதிப்பும் வராது என்ற நிலை வரும்போது, நிச்சயமாக திருவிழா உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்படும்.

தமிழ்நாடு கோயில்களில் உள்ள நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் பணி கடந்த 13 ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத பழைய நகைகள் பிரிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

உதாரணத்திற்கு திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் 64 கிலோ எடையுள்ள நகைகள் இருப்பதாக இணை ஆணையர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், நிதானமாக, பொறுமையாக நீதிபதிகள் முன்னிலையில் தங்க நகைகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இறுதிவடிவம் பெற்றபின்னர், வெளிப்படைத்தன்மையுடன் திருக்கோயில் வாயிலாக பத்திரிகை செய்தி வெளியிடப்படும் என்று கூறினார்.

பாஜக அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,”உண்மையாக குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டினால், முதல்வர் தலைமையிலான அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும். ஆதாரமில்லாமல், யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்றால்,நிச்சயமாக அந்ததந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். மற்ற மாநிலங்களே போற்றி புகழும் அளவிற்கு, எங்கும் எந்த தவறும் நிகழாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவ்வாறு தவறு நடந்தால், அது சொந்த கட்சிக்காரர் என்றாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கான நீதியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. எங்களை போன்ற அமைச்சர்கள் மீது வைக்கப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்கு பெருமளவிற்கு செவிசாய்ப்பதில்லை. இப்போது பேசும் பாஜக, கடந்த 10 ஆண்டு காலத்தில் நடந்த குற்றச்சாட்டுகளை சுட்டிக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதுபோன்று கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை பாஜக பாராட்டி இருந்தால், அது ஒரு நடுநிலையான கட்சி என்று கூறியிருப்போம். அரசியல் களத்தில் அவர்களும் இருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தி கொள்வதற்காகதான், இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share