அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்து: ஐந்து பேர் காயம்!

Published On:

| By Balaji

தமிழ்நாட்டில் சட்டத் துறை அமைச்சரின் போலீஸ் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து போலீஸார் காயமடைந்துள்ளனர்.

நேற்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார். மதுரை விமான நிலையத்திலிருந்து அமைச்சர் ரகுபதியை அழைத்துச் செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் பாதுகாப்பு வாகனம் சென்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி விலக்கு ரோடு பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பாதுகாப்பு வாகனம் சாலை அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் போலீஸ் அதிகாரி சிவகுரு, சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தலைமை ஏட்டு குணசேகரன் (டிரைவர்), போலீஸார் விக்னேஷ், கருப்பையா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழசெவல்பட்டி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, ஐந்து போலீஸாரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் காவலர்களைச் சந்தித்து, அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

இந்த விபத்து குறித்து கீழசெவல்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மதுரை விமான நிலைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share