கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளைச் சரிசெய்வது காலத்தின் கட்டாயமாகும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூலை 28) போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். பின்பு, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கடந்த ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான்; அதுபோன்று தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். கடந்த ஆட்சியில் நடந்த முறைகேடுகளையும், குளறுபடிகளையும் சரிசெய்வது காலத்தின் கட்டாயமாகும். இது யார் மீதும் பழி வாங்கும் நடவடிக்கை அல்ல. பழிவாங்கும் உணர்வு என்பது இதில் கிடையவே கிடையாது.
கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்வதே தமிழ்நாடு முதல்வர் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களின் வேலையாக உள்ளது. அனைத்து பிரச்சினைகளிலும் தமிழ்நாடு முதல்வர் நிதானமாகச் செயல்படுகிறார். அதனால், இந்த ஆட்சியில் நியாயத்தை எதிர்பார்க்கலாம்.
இது தொழிலாளர்களுக்கான அரசு. கொரோனா தொற்று குறைந்த பின்னர் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேசுவோம். தொழிலாளர் பிரச்சினையில் பின்வாங்க மாட்டோம். நியாயமான முறையில் நடந்து கொள்வோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கான இலவசப் பயணத்திட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஜெர்மனி நிதியுதவி உடன் புதிதாக 2,200 பேருந்துகளை வாங்கவுள்ளோம். இதில் எலெக்ட்ரிக் பேருந்துகள் வாங்குவதன் மூலம் டீசல் செலவை மிச்சப்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிநவீன பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,