டீசல் விலை உயர்வு-பேருந்து கட்டணம் உயர்வா? : ராஜகண்ணப்பன்

Published On:

| By Balaji

டீசல் விலை உயர்வால் பேருந்து கட்டணம் உயருமா, உயராதா என்பது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்துள்ளார்.

சென்னை பல்லவன் சாலை மாநகர போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று(அக்டோபர் 23) ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்,” தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் சார்பில் அடையாறு, திருவான்மியூர் மந்தைவெளி, தாம்பரம், சைதாப்பேட்டை, கே.கே.நகர், வில்லிவாக்கம், சென்ட்ரல், வள்ளலார் நகர், திருவொற்றியூர், வியாசர்பாடி உள்ளிட்ட 16 பணிமனைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதில் ஒன்றான மத்திய பணிமனையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த காலங்களில் 42 கிலோ மீட்டராக இருந்த பேருந்துகளின் டயர்கள் இயக்கமானது தற்போது 55 கிலோ மீட்டராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்தின் அடிச்சட்டம் 42 அங்குலத்திலிருந்து 52 அங்குலமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இலவச பயண திட்டத்தின் கீழ் சராசரியாக 7.5 லட்சம் மகளிர் பயணம் செய்கின்றனர். அதுவே திங்கள்கிழமை என்றால் 8 லட்சம் மகளிர்வரை பயணம் மேற்கொள்கின்றனர். அதாவது வேலைநாட்களில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தினசரி 38 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர்.தற்போது பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து துறை ஏற்கனவே 48 ஆயிரம் கோடி நட்டத்தில் போய் கொண்டிருக்கிறது. இருப்பினும் முதல்வர் உத்தரவின்பேரில் ஜெர்மன் உதவியுடன் பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு கமிட்டி ஒன்று ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகத்திற்கு 6000 ஓட்டுநர், நடத்துநர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டீசல் விலை 100 ஆக உயர்ந்துள்ளதால் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் தினசரி 1.15 கோடி பேர் பயணிக்கிறனர். டீசலுக்கான மானியத்தை அரசு வழங்கினாலும் கூட தொடர்ந்து டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்துத் துறை மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை, ஆனாலும் தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், மீண்டும் சென்னை திரும்பவும் வசதியாக தேவையான பேருந்துகள் இயக்கப்படும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share