மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார் போட்டியிடுகிறார். இவரது வேட்புமனுவும், அமமுக வேட்பாளர் ஆதி நாராயணன் வேட்பு மனுவும் பரஸ்பர புகாரின் பேரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டது.
திருமங்கலம் சட்டசபை தொகுதியில் அதிமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் 31 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்றது. அப்போது, அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார், வேட்பு மனுவில் அரசு வழக்கறிஞர் முன்மொழிந்து கையெழுத்திட்டது தவறு எனக்கூறி அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதேபோல அமமுக வேட்பாளர் மீது குற்ற வழக்குகள் இருப்பதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என அதிமுகவினர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து மற்ற கட்சிகளின் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் அமைச்சர் ஆர். பி .உதயகுமாரின் மனுவும், அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் மனுவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
பிறகு இரு புகார்கள் மீதும் பரிசீலனை செய்யப்பட்டு இருவரின் மனுக்களும் தேர்தல் அலுவலரால் ஏற்கப்பட்டது.
**-சக்தி பரமசிவன்**
�,