dஅமைச்சரை கேள்விகளால் துளைத்த மக்கள்!

Published On:

| By admin

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக ஆளுங்கட்சியான திமுக வினர் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்கு கேட்டு வரும் திமுகவினரிடம், பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் மகனும் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, “குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரேன்னு சொன்னிங்களே என்ன ஆச்சு?”
என்று பெண்கள் நேருக்கு நேராக கேள்வி எழுப்பினார்கள். இதை எதிர்பார்க்காத உதயநிதி, “இன்னும் நாலு வருஷம் இருக்குல்ல… கண்டிப்பா கொடுப்போம்” என்று சொல்லி சமாளித்திருக்கிறார்.

இதேபோல கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யச் சென்ற அமைச்சரிடமும் சரமாரியாக கேள்விகளை கேட்டனர் வாக்காள பொதுமக்கள்.

திமுக தலைமை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எம்.எல்.ஏ, அமைச்சர்கள், எம்.பி,களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு நெய்வேலி தொகுதி எம்.எல்.ஏ சபா ராசேந்திரனை நியமித்துள்ளது.

நேற்று பிப்ரவரி 9ஆம் தேதி, காலை 8.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான வெ.கணேசன், நெல்லிக்குப்பம் நகராட்சி தேர்தல் பொறுப்பாளர் எம்.எல்.ஏ சபா ராசேந்திரன், மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரத்துக்கு சென்றார்.
பிரச்சார வாகனம் பின்னால் காவல் துறையினர், மாவட்ட மாநில உளவு பிரிவினர், தேர்தல் அதிகாரிகள் சென்றனர். கூடவே நாமும் பயணித்தோம்.

ஒவ்வொரு வார்டுக்கும் போகும்போது அந்த வார்டு வேட்பாளரை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வார்டு எல்லை முடிவில் அவரை இறக்கிவிட்டுட்டு, அடுத்த வார்டு வேட்பாளரை ஏற்றிக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள்.
4வது வார்டு வாண்பாக்கம் பகுதியில் திமுக வேட்பாளர் ஹேமலதா பன்னீரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் கணேசன்,
” நமது தமிழக முதல்வர் சொன்னதையும் செய்தார், சொல்லாததையும் செய்தார். முன்பெல்லாம் பெண்கள் பேருந்தில் ஏறினால் டிக்கெட் கேட்பார், முறைப்பார் நடத்துநர். ஆனால் நமது ஆட்சியில் பெண்கள் பஸ் ஏறினால் வணக்கம் வைத்து டிக்கெட் கேட்காமல் அழைத்துப்போய் இறக்கிவிடுகிறார்கள்” என்று பேசியபோது, அங்கே கூடியிருந்த மக்கள், “எங்கள் ஊருக்கு வந்த பஸ் இப்போது நின்னுபோச்சு. முதலில் அந்த பஸ்ஸை விடுங்க” என்று கோரஸாக கோரிக்கை வைத்தனர்.

உடனே அமைச்சர் மைக்கை ஆஃப் செய்யாமல், “அந்த எம்.டி,க்கு போன்போடுங்க‌… எங்கப்பா போட்டிங்களா, ஏ…அன்பு (உதவியாளர்) எங்கடா… போன் போட்டியா இல்லையா?” என்று சத்தம்போட, அன்பு அவசரமாக போக்குவரத்துக்கழக அதிகாரிக்கு போன்போட்டு அமைச்சரிடம் கொடுத்தார்.
மேடையில் நின்றபடி அமைச்சர், “கடலூர்லேர்ந்து வான்பாக்கம் வந்த பஸ் இப்போது வர்றதில்லேனு மக்கள் சொல்றாங்க. நாளை காலையிலேர்ந்து இந்த ஊருக்கு பஸ் வந்தாகணும்” என்று உத்தரவிட்டு லைனைத் துண்டித்தவர், மக்களை பார்த்து…
“நாளை காலையிலிருந்து உங்கள் ஊருக்கு பஸ் வரும்” என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டு அடுத்த வார்டுக்கு நகர்ந்தார்.

1508 வாக்காளர்கள் உள்ள 2வது வார்டு (தனி) சோழவள்ளி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கே திமுக வேட்பாளராக இலக்கியா போட்டியிடுகிறார்.

அந்த வார்டில் மரத்தடியில் மக்கள் கூடியிருந்தனர். அங்கே திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சரிடம் ஒரு மூதாட்டி, “என் பேரு பாக்கியம். சாப்பாட்டுக்கு வழி இல்ல. பிள்ளைங்களும் சாப்பாடு போடமாட்றாங்க. பசி பட்டினியா இருக்கேன்” எனப் பரிதாபமாகச் சொல்ல, “உங்களுக்கு முதியவர் பென்ஷன் வருதா?” என்று அமைச்சர் கேட்டார்.
வருதுங்க என்றதும் அமைச்சர் திகைத்து நின்றார்.

இன்னொரு மூதாட்டி, ” எனக்கு பென்ஷன் வரலை” என்று சத்தம் போட்டுச் சொல்ல, அந்த மூதாட்டி பக்கம் திரும்பி, “உன் பெயர் என்னம்மா” என்று கேட்டார். “என் பெயர் சித்தியம்மா” என்றார் அவர்.
உடனே… “ஏம்ப்பா நகரசெயலாலர் எங்கயா, இங்கே வா, நாளைக்கு விஏஒவை அழைத்து உடனே ஏற்பாடு செய்துகொடுத்துட்டு எனக்கு பேசுங்க” என்று உத்தரவிட்டார்.

அடுத்த மூதாட்டி, “எனக்கும் விதவை பணம் வரவலை” என்று குரல் எழுப்ப… அவரைத் தொடர்ந்து மற்றொரு மூதாட்டியும் இதே குறையைக் கொட்டினார்.

ஒருகணம் டென்ஷனான அமைச்சர், “விதவை பென்ஷன், முதியவர் பென்ஷன் வராமல் இருப்பவர்கள் சொல்லுங்கள். உடனே ஏற்பாடு செய்கிறேன்” என்று உறுதி கொடுத்து புறப்பட்டார்.

இறுதியாக, இரவு 8.30 மணிக்கு 18வது வார்டுக்கு சென்றார் அமைச்சர். மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் தம்பிராஜ் என்ற ஷேக் தாவூத் 50 கிலோ சிக்கன், புரோட்டா செய்து வைத்து மக்களுக்கு கொடுத்தார். அங்கே பிரச்சாரத்தை முடித்து விட்டு இரவு ஒரு தனியார்ப் பள்ளிக்கு சென்று முக்கிய விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்திவிட்டு… இன்று பிரச்சாரம் செய்ய வரும் உதயநிதிக்கு கூட்டத்தை எப்படியெல்லாம் திரட்டவேண்டும் என டிப்ஸ் கொடுத்து விட்டு புறப்பட்டார்.

**வணங்காமுடி**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share