தமிழ்நாட்டில் ஜனவரி 20ஆம் தேதிக்கு பிறகு கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு, ஆன்லைனிலேயே தேர்வுகளும் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சில கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டன.
இதையடுத்து, ஆன்லைனில் பாடம் நடத்தியதுபோன்று, தேர்வையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தொடர்ந்து, ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித் துறை தெரிவித்தது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தேர்வுகளை ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று(நவம்பர் 19) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தேர்வு அதிகாரிகள் மற்றும் மாணவர் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,”மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நேரடி தேர்வுகள் நடத்தப்படுகிறது. நேரடி தேர்வு எழுத வேண்டுமானால் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு மாதம் கால அவகாசம் அளித்து ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.
நேரடி தேர்வு தொடர்பாக மாணவர்களை அழைத்து பேசுமாறு முதல்வர் கூறினார். அதன்படி, 11 மாணவர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதனடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் தினசரி கல்லூரிக்கு வர வேண்டும். இந்த இரண்டு மாதங்களில் அனைத்து பாடங்களும் நடத்தப்பட்டு, மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். அதன் பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும்.
ஆன்லைன் தேர்வு கேட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும். எங்களின் முடிவை மாணவர்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டனர். அதற்கு மாணவர்களுக்கு உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
**-வினிதா**
�,