சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுக தலைமை யார்? ஓ.எஸ்.மணியன்

Published On:

| By Balaji

சசிகலா விடுதலைக்குப் பின் அதிமுக தலைமை யார் என்ற கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகிய மூவரும், 2017 பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே சிறையிலிருந்த காலங்களைக் கழித்தும், நன்னடத்தை காரணமாகவும் இன்னும் ஒருசில மாதங்களில் சசிகலா விடுதலையாவார் என அமமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து கட்சியை வழிநடத்தி வருகின்றனர். அதிமுகவிலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன், அமமுகவை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார். சசிகலா சிறையிலிருந்து வெளிவந்ததும் அதிமுக, அமமுகவில் என்ன மாற்றங்கள் நிகழும் என தற்போதே விவாதங்கள் துவங்கிவிட்டன.

இந்த நிலையில் நாகை மாவட்டம் செருதூரில் 1.60 கோடி செலவில் உயர் நிலைப் பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜூலை 10) நடைபெற்றது. கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்கள் வீட்டில் ஒளிந்துகொள்ளக் கூடாது. தங்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்”என்று வலியுறுத்தினார்.

சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவை வழிநடத்துவது யார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரணமான மாவட்டச் செயலாளர். ஆகவே, இதில் எந்த கருத்தும் கூறமுடியாது” என்று பதிலளித்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share