ஈரோட்டின் வளர்ச்சிக்காக ஏறத்தாழ 82 திட்டங்களை வகுத்து, அதுகுறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறோம் என்று வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி மாருதி நகரில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம் மற்றும் சோலார் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை நேற்று (ஜூலை 29) வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “ஈரோடு மாநகரில் ஏற்கனவே பேருந்து நிலையம் இருந்தாலும், தற்போதைய சூழலில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமான 15 முதல் 20 ஏக்கர் நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முயற்சி செய்து வருகிறோம். அவ்வாறு வந்தால், தற்போது செயல்படும் பேருந்து நிலையத்தில் நகர பேருந்து நிலையமாகச் செயல்படும்.
ஈரோடு மஞ்சள் வளாகம் 15 ஏக்கரில் விரிவுபடுத்தி தரப்படும். விளையாட்டுத்துறை முன்னேற்றத்திற்காக ரூபாய் 35 கோடி மதிப்பில் விளையாட்டு அரங்கம், சட்டக் கல்லூரி,வேளாண் கல்லூரி,டெக்ஸ்டைல்ஸ் பல்கலைக்கழகம் உள்பட ஈரோட்டின் வளர்ச்சிக்காக ஏறத்தாழ 82 திட்டங்களை வகுத்து அதுகுறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.
மொடக்குறிச்சி தொகுதியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான இடம் குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறிய அமைச்சர், ஈரோட்டில் அனைத்து வழி சாலைகள் விரிவாக்கம், ரயில்வே மேம்பாலங்கள் சீரமைப்பு, குடிசை பகுதி மக்களுக்கு நிரந்தர வீடு, துணை நகரம், ஆட்டோ நகரம் இப்படி பல்வேறு திட்டங்கள் ஆய்வில் உள்ளன.
இந்தத் திட்டங்களை எல்லாம் விரைந்து செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை வாட்ஸ்அப் மூலம் 117 புகார்கள் பெறப்பட்டன. இதில் 93 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 24 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
**-வினிதா**
�,”