பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் நாசர் ஆகியோர் பதில் அளித்திருந்த நிலையில் இன்று அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை சுகாதாரத் துறை மீதும் வீட்டு வசதி துறை மீதும் ஊழல் குற்றம்சாட்டினார். கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் நியூட்ரிஷியன் கிட்டில் முறைகேடு செய்திருப்பதாகவும், தமிழகத்தில் நிலம் அப்ரூவல் கொடுப்பதற்கு ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு மட்டுமே அரசு சாதகமாக செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக 200 நாட்களில் வழங்கவேண்டிய அப்ரூவல் குறுகிய நாட்களிலேயே வழங்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்குத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்த நிலையில் இன்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, எழும்பூர், சி.எம்.டி.ஏ. தாளமுத்து நடராஜன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திடீரென சிஎம்டிஏவின் சிஇஓ பதவி உருவாக்கியிருப்பதாக அண்ணாமலை சொல்கிறார். இதில் உள்நோக்கம் இருப்பதாகச் சொல்கிறார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. 1978 முதல் இந்த பதவி இருக்கிறது. தற்போது இருக்கிற சிஇஓ 46ஆவது நபர் ஆவார்” என்றார்.
“கோவையில் 122 ஏக்கர் நிலம் அப்ரூவலுக்கு 8 நாட்களில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அமைச்சர், “நில மாற்றம், லே அவுட், பில்டிங் என மூன்று நடைமுறைகள் இருக்கிறது. தடையில்லா சான்றுக்கு ஏறத்தாழ 24 துறைகளில் அனுமதி வாங்க வேண்டும். இதற்கு நேரம் அதிகமாகும். இதைத்தான் அவர் அப்படி சொல்லிருக்கிறார்.
கோவை விவகாரத்தைப் பொறுத்தவரை சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019ல் விண்ணப்பம் போட்டிருக்கிறார். அதன் பிறகு இது திட்டக்குழுமத்திலிருந்து 13.3.2020ல் தான் வருகிறது. இறுதியாக 28.1.2021 அன்றுதான் நிலம் மாறுதலுக்கு ஒப்புதல் கிடைத்தது. இந்த விவகாரத்தில் சிவமணியிடம் ஜிஸ்கொயர் எங்கிருந்து வந்தது என்று எங்களுக்குத் தெரியாது. இதெல்லாம் கடந்த ஆட்சியில் நடந்திருக்கிறது” என்றார்.
தொடர்ந்து ஜி ஸ்கொயர் நிறுவனம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ஜி ஸ்கொயருக்கு நான் என்ன மேனேஜரா என்று பதில் கேள்வி எழுப்பிய அமைச்சர் முத்துசாமி, ஜி ஸ்கொயர் பெயரில் சில விண்ணப்பங்கள் வந்துள்ளன. அந்த நிறுவனத்திற்குக் குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. அனைத்து நிறுவனங்களுக்கும் விதிகளின் படிதான் அனுமதி வழங்கப்படுகிறது.
அண்ணாமலை கூறுவது போல் யாருக்கும் உடனடியாக அனுமதி வழங்கவில்லை. அவர் இனிமேல் உரிய ஆதாரங்களுடன் பேச வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
**-பிரியா**