மாண்புமிகு மேயரா, வணக்கத்திற்குரிய மேயரா?: மா.சு பதில்!

politics

மேயரை மாண்புமிகு மேயர் என அழைக்க வேண்டும் என மாற்றப்பட்ட அரசாணையை வணக்கத்திற்குரிய மேயர் என மாற்றுவது குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று(மார்ச் 5) தமிழ்நாடு முழுவதும் 23வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை கே.கே.நகரில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நேற்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் 21 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவிகள் திமுகவுக்கும், அதன் தோழமைக் கட்சிகளுக்கும் கிடைத்தது. மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 136 நகராட்சி தலைவர்களாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் பதவி வகித்துள்ளனர். 489 பேரூராட்சி தலைவர் பதவியில் 18 இடங்கள் மட்டுமே அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. மீதமுள்ளவை திமுக மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள்” என்று கூறினார்.

தமிழக மாணவர்கள் மீட்பு குறித்து பேசிய அவர், “இதுவரை 500 மாணவர்கள் மீட்கப்பட்டு தமிழகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவம் பயின்றவர்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை. வெவ்வேறு துறையில் படித்தவர்களும் இருக்கலாம். உக்ரைனிலிருந்து அனைத்து மாணவர்களும் தமிழகம் வந்தபிறகுதான், அவர்கள் படிப்பு குறித்து முடிவெடுக்க முடியும்.

எப்படியாவது மருத்துவக் கனவை நனவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மாணவர்கள் படிக்கின்றனர். இது அவர்களின் தியாக வாழ்க்கை. அவர்கள் ஐந்தாறு வருஷம் படிப்பை முடிப்பதற்குள்ளாக சீதோஷண நிலை காரணமாக பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். இதற்கு காரணம் அவர்களால் இங்கே மருத்துவ படிப்பை படிக்க முடியாததுதான். அதனால்தான், நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மேயரை “மாண்புமிகு மேயர்” என அழைக்க வேண்டும் என மாற்றப்பட்ட அரசாணையை “வணக்கத்திற்குரிய மேயர்” என மாற்றுவது குறித்து முதலமைச்சர் பரிசீலிப்பார்”என்று கூறினார்.
**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.